ஒரு ரூபாய்க்கு இட்லி விற்ற பாட்டிக்கு தேடி வந்த அதிர்ஷ்டம்... வேண்டாம் என்று மறுத்த ஆச்சரியம்

Report Print Santhan in பெண்கள்

தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்ற பாட்டியை பலரும் சமூகவலைத்தளங்களில் பாராட்டி வந்த நிலையில், அவருக்கு இப்போது வீடு கட்டித் தருவதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் பகுதியை யொட்டிய வடிவேலாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலா(80). இவர் தான் இருக்கும் கிராமத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருவதாக செய்தி வெளியாகி பிரபலமானதால், அவரை ஊடகங்கள் தொடர்ந்து பேட்டி எடுத்து அவரை வைரலாக்கினர்.

அதைத் தொடர்ந்து தொழிலதிபர்கள், யூடியூப்பைச் சேர்ந்தவர்கள் பலரும் இந்த காலத்தில் ஒரு ரூபாய்க்கு, அதுவும் தள்ளாத 80 வயதில் இவர் செய்யும் செயல் பாராட்டுக்குரியது என்று கூறி, தங்களால் என்ன முடியுமோ அந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கமலா பாட்டியை தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து பேசியுள்ளார்.

80 வயதிலும் லாபத்தை நோக்கமாகக் கொள்ளாமல் பலரின் பசியாற்றிவரும் பாட்டியை வாழ்த்து தெரிவித்ததுடன், உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஆனால் பாட்டியோ எதுவுமே வேண்டாம் என்று கூறியுள்ளார். இருப்பினும் ஆட்சியர் அது எப்படி விட முடியும்? என்று பாரதப் பிரதமரின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அவருக்கு வீடு கட்டித்தருவதாக உறுதியளித்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் கூறுகையில், கடந்த 30 வருடங்களாக அவர் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று பலரின் பசியை தீர்த்து வருகிறார்.

அவருக்கு உதவி செய்ய நினைத்தாலும் மறுக்கிறார். இருந்தாலும், அவரை கெளரவிக்கும் வகையில் அரசு சார்பில் உதவிகள் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்