உலகையே கொந்தளிக்கவைத்த கருப்பினத்தவர் கொலை: வீடியோவை எடுத்த இளம்பெண்ணிடமிருந்து ஒரு செய்தி!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

நான் வெறும் ஒரு பள்ளி மாணவி அவ்வளவுதான்... நான் ஒன்றும் ஜார்ஜ் கொல்லப்படும் வீடியோவை எடுத்து ஹீரோவாக முயற்சி செய்யவில்லை என்கிறார் அந்த இளம்பெண்!

கருப்பினத்தவரான ஜார்ஜை, வெள்ளையின பொலிசாரான டெரக் கழுத்தில் முழங்காலை அழுத்தி கொல்லும் வீடியோ உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் தொடங்கி உலகமெங்கும் பரவிய போராட்டங்கள் இன்று வரை முடியவில்லை. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் கட்டுக்கடங்காமல் பரவிவரும் வன்முறையை இன்னமும் அரசாங்கங்களால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை.

அப்படி உலகையே அதிரவைத்த அந்த வீடியோவை எடுத்தவர் Darnella Frazier (17) என்ற இளம்பெண்.

தனது தங்கையுடன் ஸ்நாக்ஸ் வாங்க மின்னபோலிஸ் உணவகம் ஒன்றிற்கு செல்லும்போது நான்கு பொலிசார், கருப்பினத்தவர் ஒருவரை கார் ஒன்றிலிருந்து வெளியே இழுப்பதை கவனித்துள்ளார் Darnella.

தான் அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான, மிக மோசமான பொலிசாரால் நிகழ்த்தப்படும் கொலை ஒன்றை ஆவணப்படுத்தப்போவதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை என்கிறார் Darnellaவின் சட்டத்தரணியான Seth Cobin.

தைரியமும், சமயோகித புத்தியும், உறுதியான கரங்களும் இல்லாதிருந்தால், அதுவும் தனது மனக் காயத்தை Darnella உலகுடன் பகிர்ந்துகொள்ள விரும்பியிருக்காவிட்டால், அந்த கொலைகார பொலிசார் நால்வரும் இன்னமும் சாலைகளில் சர்வசாதாரணமாக நடை போட்டுக்கொண்டிருந்திருப்பார்கள், மேலும் பலரை அச்சுறுத்திக்கொண்டிருந்திருப்பார்கள் என்கிறார் Cobin.

அதே போல் தான் எடுக்கும் மொபைல் வீடியோவில் ஜார்ஜின் கொலை பதிவு செய்யப்படும் என்றோ, அது உலக முழுவதும் போராட்டங்களை துவக்கி நகரங்களை தலை கீழாக மாற்றும் என்றோ Darnella நினைத்திருக்கமாட்டார்.

தான் ஒரு ஹீரோ ஆக விரும்பவில்லை என்றும், தான் சரியானதைச் செய்த வெறும் ஒரு 17 வயது மாணவி மட்டும்தான் என்றும் கூறியுள்ளார் Darnella.

நான் பார்த்ததை உலகம் பார்க்கவேண்டும் என்று மட்டும் எண்ணினேன் என்று கூறும் Darnella, பல நேரங்களில் வெளியே தெரியாமலேயே அமைதியாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன என்கிறார்.

ஜார்ஜ் கொல்லப்படும் வீடியோவை வெளியிட்டதற்காக Darnellaவுக்கு மிரட்டல் எதுவும் வரவில்லை என்றாலும், மே 25 முதல் சமூக ஊடகங்களில் பலர் அவரைக் குறித்து அவதூறாக பேசி வருவதாக தெரிவிக்கிறார் அவரது சட்டத்தரணியான Cobin.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்