டிஸ்னி லேண்ட் செல்வதற்காக சேர்த்த பணம்: சிறுவனின் நெகிழ்ச்சி செயல்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தான் டிஸ்னி லேண்டுக்கு செல்வதற்காக சேர்த்த பணத்தை டோரியன் புயலால் வீடுகளை விட்டு வெளியேறுவோருக்காக ஒரு சிறுவன் செலவு செய்து வரும் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

தென் கரோலினாவைச் சேர்ந்த Jermaine Bell, அடுத்த வாரம் ஏழாவது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கிறான்.

தனது பிறந்த நாளின்போது டிஸ்னி லேண்டுக்கு செல்வதற்காக அவன் சிறுகச் சிறுக பணம் சேர்த்து வைத்திருந்தான்.

தற்போது தென் கரோலினாவின் எட்டு countyகளில் மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு வெளியேறுமாறு அரசு உத்தரவிடுள்ளது.

எனவே ஏராளமானோர் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து வருகிறார்கள்.

அப்படி செல்வோருக்காக, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் சில உணவுப்பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறான் Jermaine.

சாலையோரம் ஒரு மேசையைப் போட்டு அதில் உணவுகளை அடுக்கி வைத்து விட்டு, கையில் ’டோரியன் புயலுக்காக வெளியேறுவோருக்கு உணவும் தண்ணீரும் இலவசம்’ என்ற போர்டுடன் நிற்கிறான் Jermaine.

இதுவரை 100 பேருக்கு அவன் உணவளித்துள்ளதாக தெரிவிக்கும் Jermaineஇன் பாட்டி, ஒரு குடும்பத்துக்காக அவன் பிரார்த்தனையும் செய்ததைக் கேட்டு தனக்கு கண்ணீரை அடக்க முடியவில்லை என்கிறார்.

என்றாலும் Jermaine டிஸ்னி லேண்டுக்கு செல்கிறான், அங்குதான் தனது பிறந்த நாள் பார்ட்டியையும் கொண்டாடுகிறான்...

எப்படி என்றால், அவனது இந்த சேவையை கேள்விப்பட்ட டிஸ்னி லேண்டின் பிரதிநிதிகள் அவனது ஆசையை நிறைவேற்ற முன்வந்துள்ளார்களாம்!

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்