வெளிநாட்டில் மகனின் துப்பாக்கி குண்டுக்கு பலியான இந்தியர்... பயத்தில் அலறியபடியே வெளியேறிய தாயார்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் 31 வயதான மகனின் துப்பாக்கி குண்டுக்கு இந்திய வம்சாவளி தந்தை பலியாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

மகனின் இந்த கொடூர செயல் கண்டு பதறிய தாயார், உயிருக்கு பயந்து குடியிருப்பில் இருந்து அலறியபடி வெளியேறியுள்ளார்.

பிலடெல்பியாவின் கான்வெல் அவென்யூ பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது.

இதில் மகேந்திர பஞ்சரோலி என்ற 60 வயது நபர் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். மகேந்திராவின் மகன் 31 வயதான சோஹன், சம்பவத்தன்று குளியலறையில் புகுந்து தமது துப்பாக்கியில் குண்டுகளை நிரப்பிய பின்னர், அங்கேயே வெடிக்க செய்துள்ளார்.

பின்னர் தந்தையும் தாயாரும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த பகுதிக்கு வந்து, தந்தை மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த தாயார் உயிருக்கு பயந்து குடியிருப்பில் இருந்து வெளியேறியுள்ளார்.

உளவியல் சிகிச்சையில் இருந்த மகன் துப்பாக்கி வைத்திருந்த தகவல் தங்களுக்கு தெரியாது எனவும், எந்த தூண்டுதலும் இன்றி அவர் துப்பாக்கியால் தாக்கியதாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

31 வயதான சோஹன் Schizophrenia என்ற நோய்க்காக சிகிச்சையில் இருந்து வந்துள்ளதும், போதை மருந்துக்கு அடிமையானவர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

180 பவுண்டு எடையும் 5 அடி 15 அங்குலம் உயரமும் கொண்ட குற்றவாளி தந்தையை கொன்ற பின்னர் துப்பாக்கியுடன் மாயமானதாகவும், அவர் மிகவும் ஆபத்தானவர் எனவும் பொலிசார் அப்பகுதி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே சோஹன் பயன்படுத்தியதாக கருதப்படும் சாம்பல் வண்ண வாகனம் ஒன்று பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இறுதியாக அவர் ஆரஞ்சு வண்ண சட்டையும் சந்தன வண்ண கால்சட்டையும் அணிந்திருந்ததாகவும், தலை மொட்டையடிக்கப்பட்ட நிலையிலும் உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய நபர் குறித்து தகவல் அறிய வரும் பொதுமக்கள், உடனடியாக பொலிசாரை தகவல் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்