அமெரிக்க துப்பாக்கி சூட்டில் அலறியடித்து ஓடிய குழந்தைகள்: ஹீரோவாக காப்பாற்றிய நபர்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோவில் நடைபெற்ற துப்பாக்கிசூட்டின் போது அலறியடித்துக்கொண்டு ஓடிய சிறார்களை ராணுவ வீரர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

அமெரிக்காவின் எல் பாசோ நகரில் உள்ள வணிக வளாகத்தில் மர்ம நபர் இன்று நடத்திய துப்பாக்கி சூட்டில் தற்போதுவரை 20 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவமானது அந்நாட்டு மக்களை பெரும் பீதியில் உறைய வைதுள்ளத்து. சம்பவத்தில் ஈடுபட்டதாக 21 வயதான Patrick Crusius என்பவரை பொலிஸார் கைது செய்து சிறைக்காவலில் வைத்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற போது சிதறி ஓடிய குழந்தைகளை க்ளென் ஓக்லி என்கிற இராணுவ வீரர் பத்திரமாக மீட்டெடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய க்ளென் ஓக்லி, நான் அந்த வணிகவளாகத்தில் டி-சர்ட் வாங்குவதற்காக சென்றிருந்தேன். அப்போது காவலாளியை நோக்கி ஓடிவந்த குழந்தை, உள்ளே ஒருவர் கையில் துப்பாக்கியுடன் திரிவதாக கூறினார்.

குழந்தை என்பதால் காவலாளி அதனை நம்பவில்லை. அந்த சமயத்தில் தான் திடீரென துப்பாக்கி சூடு சத்தம் கேட்டது. அதிகமானோர் ஆங்காங்கே வேகமாக பதுங்க ஆரம்பித்தனர். உடனே நான் என்னுடைய துப்பாக்கியை வெளியில் எடுத்தேன்.

உள்ளே ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் துப்பாக்கியுடன் சுற்றித்திரிவதாக தகவல் பரவியது. அதேசமயம், பதற்றத்தில் பெற்றோரை விட்டு பிரிந்த சிறார்கள் அழுதபடியே சிதறி ஓடிக்கொண்டிருந்தனர்.

உடனே நான் என்னுடைய துப்பாக்கியை உள்ளே வைத்துவிட்டு, சிறார்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்தேன். என் கைகளில் இருந்து ஒரு சிலர் நழுவி சென்றனர். எந்தவித ஆபத்தும் இல்லாமல் அவர்களை மீட்டு வெளியில் அழைத்து சென்றேன்.

அங்கே நின்று கொண்டிருந்த அதிகாரிகள் நான் தான் அந்த தாக்குதல்தாரி என நினைத்துக்கொண்டனர். உடனே நான் என்னுடைய உரிமத்தை அவர்களிடம் காட்டினேன் என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்