ஐஸ் கிரீம் வாங்க போகிறீர்களா?: இந்த வைரல் வீடியோவை பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள ஒரு வீடியோ, ஐஸ் கிரீம் வாங்குபவர்களை சற்று யோசிக்க வைத்துள்ளது.

வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ஒரு பெண் ஐஸ் கிரீம் வைக்கப்பட்டுள்ள பிரிட்ஜை திறந்து ஒரு ஐஸ் கிரீம் கண்டெய்னரை எடுக்கிறார்.

அவர் அதன் மூடியை திறந்து, ஐஸ்கிரீமை நாவால் நக்கிவிட்டு திரும்பவும் மூடி அந்த பிரிட்ஜுக்குள்ளேயே வைத்து விட, அந்த வீடியோவை எடுக்கும் நபர், அந்த பெண்ணை உற்சாகப்படுத்துகிறார்.

சமூக ஊடகம் ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோ 8 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உணவை அசுத்தம் செய்வது அமெரிக்கச் சட்டப்படி குற்றம் என்று கூறியுள்ள சிலர், அந்த பெண்ணை கைது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.

இந்த சம்பவம் எங்கு நடந்தது, அந்த பெண் யார் என்பது தெரியாத நிலையில், சிலர் அந்த வீடியோவைப் பார்த்துவிட்டு, அந்த பெண் San Antonioவைச் சேர்ந்தவர் என்றும், அங்குள்ள Walmart ஒன்றில் இந்த சம்பவம் நடந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த ஐஸ் கிரீமை தயாரித்த நிறுவனமான Blue Bell Creameries, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உணவை அசுத்தமாக்கும் இத்தகைய செயல் குறித்து எங்களை எச்சரித்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி.

நாங்கள் இந்த பிரச்சினையை சீரியஸாக எடுத்துக் கொள்வதோடு, சட்ட ரீதியாக என்ன செய்யலாம் என ஆராய்ந்து வருகிறோம்.

மேலும் எங்கள் தயாரிப்புகளைப் பொருத்தவரையில், எங்கள் ஐஸ் கிரீம் கண்டெய்னர்கள் தலைகீழாக கவிழ்க்கப்பட்டு உறைய வைக்கும் அறைக்கு அனுப்பப்படும். அவ்விதம் செய்வதால் மூடி ஐஸ்கிரீமுடன் இறுக்கமாக ஒட்டிக் கொள்ளும்.

அதனால் யாராவது மூடியை திறந்துவிட்டு திரும்ப மூடி வைத்திருந்தால், அந்த கண்டெய்னரைப் பார்த்தவுடனேயே அதை எளிதில் கண்டு பிடித்து விடலாம்.

எனவே வாடிக்கையாளர்கள் இதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்