மனிதக் கழிவு, பூச்சிகள், புழுக்கள் நிறைந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களும், செல்லப்பிராணிகளும்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா
166Shares

அமெரிக்காவின் பெனிசில்வேனியாவில் மனிதக் கழிவு, பூச்சிகள், புழுக்கள் நிறைந்த வீட்டிலிருந்து மூன்று சிறுவர்களும் 20 செல்லப்பிராணிகளும் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வழியாக நடந்து சென்ற ஒருவர், முகத்தில் காயங்களுடன் நின்று கொண்டிருந்த இரண்டு சிறுவர்களைக் கண்டு பொலிசாருக்கு புகாரளித்ததைத் தொடர்ந்து பொலிசார் அங்கு சென்றுள்ளனர்.

அந்த வீட்டில் மூன்று சிறு பிள்ளைகள் ஒரு வயது வந்த பிள்ளை மற்றும் இரண்டு பெரியவர்கள் இருந்துள்ளனர்.

மனிதக்கழிவு, சாக்கடை, உண்ணிகள், ஈக்கள், புழுக்கள் மற்றும் இறந்த விலங்குகளின் அழுகிப்போன உடல்கள் என நிறைந்திருந்த அந்த வீட்டைப் பார்வையிட்ட அதிகாரி ஒருவர், எந்த குழந்தையும், ஏன் எந்த விலங்கும் கூட அப்படிப்பட்ட ஒரு வீட்டில் வாழக்கூடாது, அப்படி ஒரு நிலைமையில் அந்த வீடு இருந்தது என்கிறார்.

குழந்தைகளை வேறு உறவினர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ள பொலிசார், குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை ஒன்று நடந்து வருவதாக தெரிவித்தனர்.

அந்த வீட்டிலிருந்த பெரியவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது குழந்தைகள் துஷ்பிரயோகம் மற்றும் விலங்குகள் கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்த வீட்டில் நாய்கள், பூனைகள், ஒரு பன்றி, எலிகள், பெரிய வகை சிலந்தி ஒன்று, பச்சோந்தி ஒன்று என 20 விலங்குகள் மோசமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் காணாமல் போன ஒரு மலைப்பாம்பை பொலிசார் தேடி வருகின்றனர்.

என்ன நடந்தது, அந்த குழந்தைகளின் முகத்தில் எப்படி காயம்பட்டது, விலங்குகள் ஏன் இறந்தன என்பது எதுவும் தெரியாத நிலையில், பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்