அமெரிக்காவில் தேவாலயம் ஒன்றை தகர்க்க திட்டமிட்ட சிரியா அகதி இளைஞரை பொலிசார் வெடிகுண்டுகளுடன் மடக்கிப் பிடித்துள்ளனர்.
ஐ.எஸ் பயங்கரவாத குழுவுக்கு ஆதரவாக இந்த வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுக்க இருந்ததாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தென்மேற்கு பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பெர்க் பகுதியில் அமைந்துள்ள தேவாயம் ஒன்றை தகர்க்கவே குறித்த சிரியா அகதி இளைஞர் திட்டமிட்டுள்ளார்.
முஸ்தபா மெளசாப் அலோமர் என்ற அந்த 21 வயது இளைஞர் இதுவரை அமெரிக்க அரசால் படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாத சகோதரர்களுக்காக பழிவாங்கவே இந்த தாக்குதலை திட்டமிட்டுள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
புதனன்று காலையில் கைதாகும்போது, அவரிடம் இருந்து சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
சிரியாவின் தாரா பகுதியில் பிறந்த அலோமர், அங்குள்ள உள்நாட்டு கலவரங்களில் இருந்து தப்பி அமெரிக்காவில் அகதியாக குடியேறியுள்ளார்.
இருப்பினும் அவரது விசுவாசமானது ஐ.எஸ் பயங்கரவாத குழுவின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி மீதே இருந்தது.
இந்த நிலையில், பிட்ஸ்பெர்க் பகுதியில் பல இடங்களில் தாக்குதல் நடத்த அலோமர் திட்டமிட்டுள்ளார்.
அதில், ஷியா மசூதி அமைந்துள்ள பகுதி, யாசிதி குடும்பத்தினர் குடியிருக்கும் பகுதி மற்றும் அமெரிக்க முன்னாள் ராணுவத்தினர் குடியிருக்கும் பகுதி உள்ளிட்டவைகளை தெரிவு செய்துள்ளார்.
இறுதியில் பிட்ஸ்பெர்க் பகுதியில் அமைந்துள்ள தேவாயம் ஒன்றை இறுதி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தேவாலயத்தை தகர்க்க திட்டமிட்ட அலோமர், ஐ.எஸ் ஆதரவாளர் என கருதி அமெரிக்க உளவு அதிகாரி ஒருவருடன் தமது திட்டத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அல்லாவுக்கு எதிராக செயல்படும் அனைவரையும் மொத்தமாக அழிக்க வேண்டும் என கூறியுள்ள அலோமர், தமது இந்த நடவடிக்கையால் அமெரிக்காவே அலறும் எனவும் தெரிவித்துள்ளார்.
அலோமரின் திட்டம் தொடர்பில் முன்னரே தெரியவந்த அமெரிக்க உளவு அதிகாரிகள் எப்.பி.ஐ அதிகாரிகளை அனுப்பி அலோமரை கைது செய்துள்ளனர்.