தீவிரவாத அமைப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுங்கள்! பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா

Report Print Kabilan in அமெரிக்கா

பாகிஸ்தான் மண்ணில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளுக்கு எதிராக தீவிரமான, அர்த்தமுள்ள நடவடிக்கை எடுங்கள் என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவ விமானப்படை, பாலாகோட் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூட் குரோஷி, இந்திய வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை தொலைபேசியில் அழைத்துப்பேசி விவரங்களைக் கேட்டறிந்தார்.

இந்நிலையில், தற்போது வியட்நாமில் 2 நாட்கள் மாநாட்டில் பங்கேற்றுவரும் பாம்பியோ வெளியிட்ட அறிக்கையில், ‘தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையாக பிப்ரவரி 26ஆம் திகதி இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுவராஜுடன் தொலைபேசியில் பேசினேன்.

பிராந்தியத்தில் அமைதியும், பாதுகாப்பும் நிலவ தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்தோம். மேலும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரோஷியிடமும் தொலைபேசியில் பேசினேன்.

அப்போது இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் செயல்பட்டு, ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். தங்கள் மண்ணில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு எதிராக உறுதியான, அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

பதற்றத்தை எந்த விதத்திலும் தணிக்கும் வகையில், இரு நாடுகளும் செயல்பட தேவையான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம் என இரு நாட்டு அமைச்சர்களிடம் நான் பேசினேன். எதிர்காலத்தில் ராணுவ நடவடிக்கையை தவிர்க்கும் வகையில், இரு அமைச்சர்களும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பதற்றப்பட்டு ராணுவ நடவடிக்கையில் இறங்காமல், பொறுமை காக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers