இந்திய பிரதமர் மோடியை கிண்டல் செய்த டொனால்டு டிரம்ப்!

Report Print Kabilan in அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் இந்தியா அமைத்துக் கொடுத்த நூலகம் யாருக்கும் பயனில்லாமல் இருக்கிறது என இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கிண்டல் செய்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு 300 கோடி டொலர் அளவுக்கு நிதியுதவி அளிப்பதாகவும், காபூல் நகரில் உயர்ந்த தரத்திலான பள்ளிக்கூடம் கட்டித்தரவும் உள்ளதாக இந்தியா உறுதியளித்துள்ளது. அத்துடன் ஆயிரம் ஆப்கானிஸ்தான் மாணவர்கள் உதவித்தொகையுடன் இந்தியாவில் கல்வி கற்கவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆப்கானிஸ்தானுக்கு, இந்தியா நிதியுதவி அளித்துள்ளது குறித்து வெள்ளை மாளிகையில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ ஏராளமான பணிகளை அமெரிக்கா செய்துள்ளது. அந்நாட்டு மக்களுக்காக ஏராளமான முதலீடுகளையும் செய்துள்ளது.

ஆனால் இந்திய பிரதமர் மோடி அடிக்கடி என்னிடம், ஆப்கானிஸ்தானில் நாங்கள் நூலகம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம் என்கிறார். உங்களுக்கு தெரியுமா அந்த நூலகம் எங்கே இருக்கிறது? போர் நடந்து கொண்டிருக்கும் அந்த நாட்டில் நூலகம் அமைத்து யாருக்கு என்ன பயன்.

அந்த நூலகத்தில் அமர்ந்து 5 மணிநேரம் செலவு செய்திருப்போமா. பிரதமர் மோடி அவ்வாறு கூறியதற்கு, ஓ அப்படியா நூலகம் அமைத்துக் கொடுத்தமைக்கு நன்றி என்று கூறிவிட்டேன். ஆப்கானிஸ்தானில் நீங்கள்(பிரதமர் மோடி) அமைத்துக் கொடுத்த நூலகத்தை யார் பயன்படுத்துகின்றார்கள் என்று எனக்கு தெரியாது’ என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் எதிராகப் போரிட்டு வந்த அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை 14 ஆயிரத்தில் இருந்து பாதியாக குறைத்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

AP

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers