நான் இங்கு வரவில்லை என்றால்....! 30 வயதில் 60 குழந்தைகளுக்கு தாயாக மாறிய இளம் பெண்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் நான் நேபாளத்திற்கு வரவில்லை என்றால் பணக்காரியாகவே இருந்திருப்பேன், ஆனால் தற்போது 60 குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறேன் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த மேகி(30) என்ற இளம் பெண் தன்னுடைய 18 வயதில் உலகை சுற்றி பார்க்க புறப்பட்டுவிட்டார்.

அப்படி நேபாளத்திற்கு சுற்றுலா வந்தபோது, அங்கு வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கைமுறை இவருக்கு பிடித்துவிட்டதால், அங்கேயே தங்கிவிட்டார்.

அங்கு வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் அதிகம் என்பதால், ஏழை-எளிய குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கிறார்.

இப்படி முதலில் ஒன்று, இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து தற்போது 60 குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு குழந்தை ஒன்றும் இருக்கிறது.

இது குறித்து அவர் கூறுகையில், நேபாளத்திற்கு வரும் வரை அப்படி ஒரு எதிர்பார்ப்பே எனக்கு இல்லை, ஆனால் தற்போது நேபாளம் என்னை 60 குழந்தைகளுக்கு தாயாக மாற்றிவிட்டது.

இங்கு வாழும் மலைவாழ் மக்கள், ஏழ்மையானவர்கள். மலைத்தோட்டங்களிலும், இயற்கை பராமரிப்பு வேலைகளிலும் ஈடுபட்டு தங்களது அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள். உணவிற்கே கஷ்டப்படும் இவர்களுக்கு கல்வி என்பது எங்கோ இருப்பது போல் தோன்றுகிறது.

அதை மாற்றுவதே என்னுடைய வேலை, முதலில் ஓரிரு குழந்தைகளை தத்தெடுத்து, கல்வி கட்டணம் செலுத்தி வந்தேன். ஆனால் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே, நானே சொந்தமாக கோபில்லா மலைப்பகுதியில் பள்ளி ஒன்றை கட்டிவிட்டேன்.

இந்த பள்ளியில் இணையும் அத்தனை குழந்தைகளும், என்னுடைய குழந்தைகளே. அவர்களுக்கு கல்வி, உணவு, நல்ல எதிர்காலத்தை இலவசமாக கொடுக்கவேண்டியது என்னுடைய பொறுப்பாகவுள்ளது.

அந்தவகையில்தான் நான் 60 குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறேன். நான் ஜெர்மி என்பவரை காதல் திருமணம் தான் செய்து கொண்டேன். எங்களுடைய திருமணம் நேபாள முறைப்படி தான் நடந்தது. இங்கிருக்கும் குழந்தைகள் முன்னிலையில் தான் நடந்தது.

முதலில் தன்னை அம்மா என்று மட்டுமே சொந்தம் கொண்டாடியவர்களுக்கு, அப்பாவும் வந்துவிட்டார். அதோடு, ஒரு குட்டி தம்பியும் வந்துவிட்டான். அதனால் எங்களது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் அமெரிக்காவில் இருந்திருந்தால் பணக்காரியாக மட்டுமே இருந்திருப்பேன். ஆனால் 60 குழந்தைகளுக்கு தாயாகி இருக்க முடியாது. அது ஏன் திருமணம் நடந்திருக்குமா, என்பது கூட சந்தேகமாகவே இருக்கிறது.

அந்தவகையில் நேபாளம் என்னுடைய வாழ்க்கையின் பொக்கிஷம். இதை தொலைத்துவிட மாட்டேன் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

இவரின் இந்த சேவையைக் கண்ட இணையவாசிகள் தங்களுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் கூறி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்