இன்று கூகுளில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தமிழன்.. அன்று எப்படி இருந்தார் தெரியுமா? அவரே சொன்ன பதில்

Report Print Santhan in அமெரிக்கா

என்னுடைய இளமை காலத்தில் சாதரண வீட்டில் தான் தங்கினேன், தரையில் படுத்து தூங்கினேன் என்று தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும், தமிழர் சுந்தர் பிச்சை உருக்கமாக கூறியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை மதுரையில் பிறந்திருந்தாலும், அவர் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான், தன்னுடைய பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்த அவர் தன் பின், காரக்பூர் ஐஐடியில் பட்டப்படிப்பையும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திலும் முதுநிலைப் பட்டம் பெற்றார்.

பென்சில்வேனியா வார்டன் பள்ளியில் எம்.பி.ஏ. பட்டத்தையும் சுந்தர் பிச்சை பெற்றார். கடந்த 2004-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த இவர் படிப்படியாக உயர்ந்து அடுத்த 10 ஆண்டுகளில் 2015-ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தன்னுடைய இளமை காலம் எப்படி இருந்தது என்பதை பற்றி பேட்டியளித்துள்ளார்.

அதில், இன்று நான் மிகப்பெரிய நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கிறேன். ஆனால் எனக்குள்ளும் எளிமையான வாழ்க்கை இருந்தது. இன்றைய வாழ்க்கை முறையோடு, உலகோடு ஒப்பிடும்போது, அந்த வாழ்க்கை மிகவும் அழகானது.

சென்னையில் மிகவும் சாதாரண சிறிய வாடகை வீட்டில் என் என் பெற்றோருடன் வாழ்ந்தேன். வீடு மிகவும் சிறியதாக இருந்ததால் அனைவரும் தரையில்தான் படுத்து உறங்குவோம்.

நான் சென்னையில் வாழ்ந்த காலத்தில் திடீரென பஞ்சம் ஏற்பட்டது, அதை நினைத்து நாங்கள் கவலைப்பட்டோம், பயந்தோம். அந்தப் பஞ்சத்தின் அச்சம் காரணமாகவே இன்றுகூட நான் தூங்கும்போது, ஒரு பாட்டில் தண்ணீர் இல்லாமல் தூங்கியதில்லை.

அதனால்தான் இன்றைக்கும் உறங்கும் போது என் தலைக்கு அருகில் தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொள்ள மறப்பதில்லை. மற்ற வீடுகளில் எல்லாம் குளிர்சாதனப் பெட்டி இருந்தது.

ஒரு நாள் அதை வாங்கிய போது பெரிய விஷயமாகத் தெரிந்தது. அப்பொழுதெல்லாம் கையில் எது கிடைத்தாலும் அதைப் படிப்பேன், சார்லஸ் டிக்கன்ஸ் புத்தங்களைக் கூடப் படித்திருக்கிறேன்.

நண்பர்கள், தெருவில் கிரிக்கெட் விளையாடுவது மற்றும் புத்தகங்கள் வாசிப்பது இப்படித்தான் அன்றைக்கு என் வாழ்க்கை இருந்தது. ஆனால் அதில் நீங்கள் எந்தக் குறையையும் உணர முடியாது என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

தமிழர்களை பெருமையடைய வைத்த சுந்தர் பிச்சையின் 2016-ஆம் ஆண்டு சம்பளம் 1,285 கோடி என செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்