இதற்காகவே பல கர்ப்பிணிகள் அமெரிக்காவுக்கு வருகின்றனர்: டொனால்டு டிரம்ப் அதிரடி குற்றச்சாட்டு

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்க குடியுரிமை பெறுவதற்காகவே மகப்பேறு சுற்றுலாவாக, வெளிநாட்டில் இருந்து பல கர்ப்பிணிகள் இங்கு வருகின்றனர் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் உள்ள கொலம்பியா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உரையாற்றினார்.

அப்போது அவர், தங்களது குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் அமெரிக்க குடியுரிமை கிடைப்பதுடன், அவர்களுக்கு தேவையான அனைத்தும் உறுதிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் இங்கு ‘பிரசவ சுற்றுலா’ வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை பெருகி விட்டதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘சீனாவில் இருந்தும் இன்னும் சில ஆசிய நாடுகளில் இருந்தும் இதுபோல் அதிகமான பெண்கள் வருகின்றனர். இது இப்போது ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. அவர்கள் நமது நாட்டின் எதிரியாக இருக்கலாம்.

நம்மீது போர் தொடர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கலாம். ஒருவர் நம்மை வெறுப்பவராகவும் தனது நாட்டின் சர்வாதிகாரியாகவும் இருக்கலாம். ஆனால், அவரது மனைவி அமெரிக்காவில் குழந்தை பெற்றுவிட்டால் அவரது மகனுக்கோ, மகளுக்கோ அமெரிக்க குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்?

நமது நாட்டின் மண்ணில் கால்பதித்த சில விநாடிகளில், அந்த பெண்களுக்கு குழந்தை பிறந்து விட்டாலும் அந்நியர்களுக்கு பிறப்பின் அடிப்படையில் நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் விரும்புகிறார்கள்.

இதுபோன்ற கேலிக்கூத்தான, பைத்தியக்காரத்தனமான கொள்கையால் சட்டவிரோதமாக வருபவர்களுக்கு பிறக்கும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் நாம் குடியுரிமை அளிக்க வேண்டியுள்ளது. இந்த முறைக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்