தீ விபத்தில் பலியானதாக கருதப்பட்ட மகள்: 6 ஆண்டுகளுக்கு பின்னர் தாயாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் தீ விபத்தில் பலியானதாக கருதிய மகளை நீண்ட ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் உயிருடன் சந்தித்த சம்பவம் தாயார் ஒருவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் குடியிருப்பவர் Luz Cuevas. இவரது குடியிருப்பானது கடந்த 1997 ஆம் ஆண்டு தீ விபத்தில் சிக்கி சேதமடைந்தது.

இச்சம்பவத்தின்போது பிறந்து வெறும் 10 நாட்களேயான அவரது மகள் முதல் மாடியில் உள்ள படுக்கை அறையில் படுத்திருந்துள்ளார்.

தீ விபத்தில் இருந்து மகளை காப்பாற்றும் நோக்கில் மாடிக்கு விரைந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அங்கே தொட்டில் மட்டுமே இருந்தது, குழந்தை மாயம்.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் இறுதியில் அதிர்ச்சி தரும் முடிவுக்கு வந்தனர்.

அதாவது, நடந்த தீ விபத்தில் அந்த பிஞ்சு குழந்தையின் உடல் கருகி சாம்பலாகியுள்ளது என்பதே அது.

சம்பவம் நடந்து ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில், லஸ் தமக்கு நெருங்கிய நபர் ஒருவரின் பிறந்த நாள் விருந்தில் கலந்துகொள்ள சென்றுள்ளார்.

அங்கே அவருக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. கன்னக் குழியுடன், கருப்பு கேசத்துடனும் சிறுமி ஒருவரை லஸ் அந்த விருந்தில் சந்தித்துள்ளார்.

அச்சிறுமியின் அருகாமையில் சென்ற அவர் தந்திரத்தில் குறித்த சிறுமியின் தலைமுடி இழைகளை எடுத்து டி.என்.ஏ சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

டி.என்.ஏ சோதனையில் உண்மை வெளியானது. அந்த சிறுமி ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தீ விபத்தில் கொல்லப்பட்டதாக கருதிய அதே குழந்தைதான் என்பது நிரூபணமானது.

மட்டுமின்றி குழந்தையை கைப்பற்ற உறவினர் ஒருவரே திட்டமிட்டு லஸ்சின் குடியிருப்புக்கு நெருப்பு வைத்ததும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அம்பலமானது.

தீ விபத்து நடந்த அன்று குழந்தையை கைப்பற்றிய Correa என்பவர், New Jersey பகுதிக்கு குடிபெயர்ந்து தமது சொந்த குழந்தை என வளர்த்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தற்போது குழந்தையை திட்டமிட்டு கடத்தியது, குடியிருப்புக்கு தீ வைத்தது உள்ளிட்ட வழக்குகளில் சுமார் 30 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர் நோக்கியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers