அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: அதிகாரப்பூர்வ வேட்பாளரானார் டொனால்டு டிரம்ப்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: அதிகாரப்பூர்வ வேட்பாளரானார் டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்காக வாஷிங்டன் மாகாணத்தில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

இதன்மூலம் குடியரசுக் கட்சியின் சார்பில் டிரம்ப் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி நடைபெற உள்ளது.

இதில், போட்டியிடும் குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயககட்சி வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் நடைபெற்று வருகிறது. ஜனநாயக கட்சியில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சியில் டொனால்டு டிரம்பும் அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்து வந்தனர்.

ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராவதற்கு 2,383 பிரதிநிதிகளின் வாக்குகளும், குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராவதற்கு 1,237 வாக்குகளும் பெற்றிருக்க வேண்டும்.

இந்நிலையில் வாஷிங்டனில் நடந்த உட்கட்சித் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் 1,238 வாக்குகளை பெற்றுள்ளார் டிரம்ப்.

அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராவதற்கு தேவைப்படும் 1,237 வாக்குகளை கடந்து விட்டதால் டொனால்டு டிரம்ப் குடியரசுக் கட்சியின் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராவது உறுதியாகியுள்ளது.

அடுத்தபடியாக, கலிபோர்னியா, நியூ ஜெர்சி, நியூ மெக்சிகோ, மொன்டானா மற்றும் தெற்கு டகோடா ஆகிய மாகாணங்களில் வரும் ஜூன் 7ம் திகதி உட்கட்சித்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments