பிரித்தானியாவின் சாலிஸ்பரி பகுதியில் தரையிறக்கப்பட்ட இராணுவத் தளபதி மாயமான நிலையில், அவரை தேடும் பணியில் துருப்புகள் போராடி வருகின்றன.
பிரித்தானிய இராணுவத் தளபதியான சர் மார்க் கார்லேடன்-ஸ்மித் புதன்கிழமை முதல் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
300 சதுர மைல் கொண்ட இராணுவப் பயிற்சி பகுதியில் துருப்புகளை சந்திக்க ஹெலிகொப்டரில் சென்றவர், தவறான பகுதியில் இறக்கி விடப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அதன் பின்னர் இதுவரை தளபதி கார்லேடன்-ஸ்மித் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என்றே கூறப்படுகிறது.
இதுபோன்ற செயல்கள் இராணுவத்தில் நடப்பது வாடிக்கை தான் என பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவத் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கார்லேடன்-ஸ்மித் மிகவும் திறமைசாலி, அவர் தொடர்பில் கவலை கொள்ளத் தேவையில்லை. கண்டிப்பாக அவர் முகாம் திரும்புவார் என அந்த இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
இதே கருத்தை இராணுவத்தில் பல அதிகாரிகளும் பகிர்ந்து கொண்டுள்ளனர். இருப்பினும் மாயமான தளபதி தொடர்பில் துருப்புகள் தீவிர தேடுதலில் களமிறங்கியுள்ளனர்.
தளபதி கார்லேடன்-ஸ்மித் தரையிறங்க வேண்டிய பகுதியில் இருந்து சுமார் 600 மீற்றர்கள் தொலைவில் உள்ள பகுதியிலேயே அவர் தவறுதலாக தரையிறக்கப்பட்டுள்ளார்.
அவர் மாயமாகவில்லை, தொடர்பில் இல்லை என்றாலும், அவர் பத்திரமாக இருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தளபதி கார்லேடன்-ஸ்மித் மாயமானதாக கூறப்படும் பகுதியில் சுமார் 2000 பிரித்தானிய இராணுவத்தினர் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்றே இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.