பிரத்தானியா தலைநகர் லண்டனின் டிராஃபல்கர் சதுக்கத்தில் உள்ள நீரூற்றுகளில் சிவப்பு சாயமிட்டு விலங்கு உரிமை ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சனிக்கிழமையன்று இறைச்சிக்காக விலங்குகள் வளர்க்கப்படுவதற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் லண்டனின் டிராஃபல்கர் சதுக்கத்தில் இரண்டு நீரூற்றுகளின் நீரை ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரகாசமான சிவப்பு நிறத்தில் சாயமிட்டனர்.
விலங்கு கிளர்ச்சிக் குழுவின் சில ஆர்வலர்கள் நீரூற்றின் படுகைகளில் சாயம் ஊற்றி அதன் மேலே பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விலங்கு வளர்ப்பை முடிவு கட்டவும், தாவர அடிப்படையிலான உணவு முறைக்கு மாற்றுவதன் மூலம் எதிர்கால தொற்றுநோய்களை அரசாங்கம் தடுக்க வேண்டும் என்று கோருவதற்காக நாங்கள் இன்று இங்கு வந்துள்ளோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட விலங்கு கிளர்ச்சிக் குழு அறிக்கையில் கூறியது.
பிரித்தானியா அரசாங்கத்தின் கைகளில் இருக்கும் ரத்தத்தின் அடையாளமாக சிவப்பு சாயம் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டனர்.
பின்னர் கிரிமினல் சேதம் ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.