லண்டனில் பிரம்மாண்ட கிரேன் உடைந்து விழுந்தது... சிக்கியவர்கள் நிலை என்ன?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

நேற்று மதியம் உள்ளூர் நேரப்படி 3 மணியளவில் 65 அடி உயரமுள்ள கிரேன் ஒன்று நிலைகுலைந்து சரிந்ததில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

லண்டனிலுள்ள Compton Close, Bow என்ற இடத்தில் அடுக்கு மாடிக் கட்டிடங்கள் கட்டும் பணிக்காக பிரம்மாண்ட கிரேன் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

அந்த 65 அடி உயர் கிரேன் திடீரென நிலைகுலைந்து இரண்டு வீடுகள் மீது விழுந்ததில், வீடுகள் இரண்டாக பிளந்தன.

ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலியாக, மூவர் காயமடைந்தனர். அவர்களில் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், இருவருக்கு சம்பவ இடத்தின் அருகிலேயே சிகிச்சையளிக்கப்பட்டது.

வீடு ஒன்றிலிருந்து பயந்து நடுங்கிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை தீயணைப்பு வீரர்கள் வெளியே அழைத்து வருவதை தான் கண்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தால் வீடு சேதமடைந்த ஒரு பெண், தனது குடும்பம் தப்பிப் பிழைத்தது அதிர்ஷ்டம்தான் என்கிறார்.

நடுங்கும் குரலில், கிரேன் விழுந்தபோது நில நடுக்கம் ஏற்பட்டதுபோல் உணர்ந்ததாக கூறும் அந்த பெண், அந்த கிரேன் விழும்போது யாராவது அந்த வீட்டிற்குள் இருந்திருந்தால் நசுங்கியிருப்பார்கள் என்கிறார்.

அதிர்ஷ்டவசமாக தனது சகோதரர்களில் ஒருவர் வேலைக்கு சென்றிருந்ததாகவும், மற்றொருவர் கீழே இருந்ததாலும் தாங்கள் தப்பியதாக தெரிவிக்கிறார் அவர்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்