மூன்று ஊழியர்களுடன் தொடங்கி இன்று பில்லியன் பவுண்டுகள் ஈட்டும் இந்தியரின் நிறுவனம் மீது புகார்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இந்தியாவில் பிறந்து பிரித்தானியாவில் 2.6 பில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய பாஷன் நிறுவனம் ஒன்றை நடத்தும் ஒருவர்மீது நவயுக அடிமைத்தனம் மற்றும் மனித கடத்தல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூஹூ என்ற பிரபல நிறுவனத்தின் உரிமையாளரான மஹ்மூத் கமானி (55), முன்பு சிறிய ஸ்டால் ஒன்றில் கைப்பைகள் விற்றவர்.

இணையம் கைகொடுக்க ஒன்லைன் வியாபாரத்தில் இறங்கிய அவர், பின்னர் தனது சொந்த பிராண்ட் ஒன்றைத் துவக்கினார்.

மான்செஸ்டர் பொருள் சேமிப்பு கிடங்கு ஒன்றில் வெறும் மூன்று ஊழியர்களுடன் தொடங்கிய அவரது நிறுவனத்தின் மதிப்பு இன்று 2.6 பில்லியன் பவுண்டுகள்.

ஆனால், திடீரென அந்நிறுவனத்தின் பங்குகள் 1.3 பில்லியன் பவுண்டுகள் அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளன.

அதற்கு காரணம் அந்த நிறுவனத்தின் மீது கொரோனா பரவலின்போது மலிவான துணிகளை பயன்படுத்தி உடைகள் தயாரித்ததோடு, பணியாளர்களுக்கு கொரோனா ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுதான்.

பூஹூ மற்றும் பிரபல நிறுவனங்களுக்காக உடைகள் தயாரிக்கும் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர், தங்கள் யாருக்கும் மாஸ்குகளோ கையுறைகளோ வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் களத்தில் இறங்கி சோதனையிட்ட Sunday Times பத்திரிகையும், அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மணிக்கு 3.50 பவுண்டுகள் மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாக செய்தி வெளியிட்டுள்ளதோடு, அந்த நிறுவனத்தில் சமூக விலகல் விதிகள் பின்பற்றப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்த விவரம் வெளியானதைத் தொடர்ந்து பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல், விசாரணை ஒன்றைத் துவக்குமாறு தேசிய குற்றவியல் ஏஜன்சிக்கு உத்தரவிட்டுள்ளார்.

இத்தகைய மோசமான கிரிமினல்கள் அறியா மக்களை அடிமைகளாக பயன்படுத்தி ஏமாற்றுவதை சகித்துக்கொள்ள இயலாது என்று கூறியுள்ள பிரீத்தி பட்டேல், தங்கள் சொந்த லாபத்துக்காக மக்களை நெருக்கமான இடங்களில் அடைத்துவைத்து துன்புறுத்துவோருக்கு இது ஒரு எச்சரிக்கை, நீங்கள் செய்வது சட்டவிரோதம், நீங்கள் வகையாக சிக்கிக்கொண்டீர்கள் என்று கூறியிருக்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்