ஒரு உயிரை எடுத்துவிட்டு எப்படி நிம்மதியாக உறங்குகிறீர்கள்! லண்டனில் கொலை செய்யப்பட்ட இளைஞனின் சகோதரி ஆவேசம்

Report Print Raju Raju in பிரித்தானியா
1833Shares

லண்டனில் 23 வயது இளைஞன் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட நிலையில் அது குறித்து அவரின் சகோதரி உருக்கமாக பேசியுள்ளார்.

வடக்கு லண்டனில் கடந்த 13ஆம் திகதி ஜமல் இப்ராஹிம் (23) என்பவர் மர்ம நபரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்துக்கு காரணமான ஆபத்தான குற்றவாளி சமூகத்தில் இன்னும் நடமாடுவதாக பொலிசார் கூறியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு silver Nissan Qashqai காரில் குற்றவாளி வந்ததாக கூறியுள்ள பொலிசார் அது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

மேலும் குறைந்தபட்சம் மூன்று பேராவது ஆயுதங்களுடன் வந்து ஜமலை தாக்கியிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக நான்கு இளைஞர்களை பொலிசார் ஏற்கனவே கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இந்நிலையில் 24 வயது இளைஞனை சந்தேகத்தின் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்னர் பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜமல் இப்ராஹிமின் குடும்பத்தார் லண்டனில் வசித்து வரும் நிலையில் அவர் சீனாவில் கல்வி பயின்று வந்தார்.

இந்நிலையில் குடும்பத்தாரை காண ஜமல் கடந்த அக்டோபர் மாதம் லண்டனுக்கு வந்தார், ஆனால் கொரோனா கட்டுபாடுகள் காரணமாக அவரால் சீனாவுக்கு திரும்ப முடியாத நிலையிலேயே கொல்லப்பட்டுள்ளார்.

ஜமல் குறித்து அவரின் சகோதரி ஷாமா கூறுகையில், நாங்கள் உங்களை வெறுக்கவில்லை, ஏன் நீங்கள் என் சகோதரரை கொலை செய்தீர்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

தவறாக அடையாளம் காணப்பட்டு என் சகோதரர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவே நினைக்கிறேன்.

ஜமலை கொன்றவர்களை ஒன்று கேட்க விரும்புகிறேன், ஒரு உயிரை எடுத்துவிட்டு எப்படி இரவில் நிம்மதியாக தூங்குகிறீர்கள்.

இந்த சம்பவத்தில் நீதி கிடைக்கும் வரை எங்கள் வாழ்க்கை அப்படியே இருக்காது.

ஏற்கனவே என்னுடைய ஒரு சகோதரன் கடந்த 2016ல் கார் மோதி இறந்துவிட்டான், எங்கள் தந்தையும் 2006ல் புற்றுநோயால் இறந்துவிட்டார்.

நாங்கள் இப்போது ஐந்து சகோதர சகோதரிகள் ஜமலை பிரிந்து தவிக்கிறோம், எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் தாய் மிகவும் வேதனையில் உள்ளார்.

ஜமலுக்கு எப்போதும் லண்டனில் செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணமே இருந்தது இல்லை, அவன் பல கனவுகளை கண்டான், ஆனால் எதுவுமே நிஜமாகாமல் போய் விட்டது என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்