பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?: இந்தியா விளக்கம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான டெபி ஆப்ரஹாமின் நடவடிக்கைகள் இந்திய தேசிய நலனுக்கு எதிரானவையாக இருந்ததால் தான் அவருக்கு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவரது விசா ரத்து செய்யப்பட்ட விடயம் முன்கூட்டியே, அதுவும் பெப்ரவரி 14 அன்றே அவருக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினரும், காஷ்மீருக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான டெபி ஆப்ரஹாம் நேற்று இந்தியா வந்தபோது, அவர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அவரை பிரித்தானியாவுக்கு அனுப்பவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தான் விசா வைத்திருந்தும் தன்னை இந்தியாவுக்குள் நுழைய விடாதது அநியாயம் என்றும், தனது நண்பர்களையும் குடும்பத்தினரையும் கூட பார்க்க அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார் டெபி.

Image Source : AP

ஆனால், இந்தியா வரும்போது டெபி முறையான விசா வைத்திருக்கவில்லை என்றும், ஆகவே அவர் திரும்பிச் செல்லுமாறு கோரப்பட்டதாகவும் இந்திய அரசாங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, முதல் 2020ஆம் ஆண்டு, அக்டோபர் 5ஆம் திகதி வரை செல்லத்தக்க இ பிஸினஸ் விசா ஒன்று கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக டெபிக்கு வழங்கப்பட்டது.

ஆனால், டெபி ஆப்ரஹாமின் நடவடிக்கைகள் இந்திய தேசிய நலனுக்கு எதிரானவையாக இருந்ததால், பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி, அவரது விசா ரத்து செய்யப்பட்டுவிட்டது.

அவரது விசா ரத்து செய்யப்பட்ட தகவல், பெப்ரவரி 14ஆம் திகதியே, அதாவது டெபி பிரித்தானியாவிலிருந்து இந்தியாவுக்கு விமானம் ஏறுவதற்கு முன்னரே அவருக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது.

தன் நாட்டுக்கு வரும் ஒருவருக்கு விசா வழங்குவது, நிராகரிப்பது, ரத்து செய்வது போன்ற விடயங்கள் அந்தந்த நாட்டின் பிரத்யேக உரிமையாகும்.

அதுமட்டுமின்றி, டெபி தனது நண்பர்களையும் குடும்பத்தினரையும் கூட பார்க்க அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த இ பிஸினஸ் விசா, கூட்டங்களில் பங்கு கொள்வதற்காக வழங்கப்படுவதேயன்றி, குடும்பத்தினரையும், நண்பர்களையும் சந்திப்பதற்காக வழங்கப்படுவது அல்ல.

அத்துடன், நாட்டுக்குள் நுழைந்தபிறகு விசா வழங்கப்படும் நடைமுறை பிரித்தானியர்களுக்கு பொருந்தாது என்றும் விசா வழங்கும் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்