பிரெக்சிட்: வாக்கெடுப்பில் வெற்றி பெற்றும் செயல்பட முடியாத நிலையில் பிரித்தானிய பிரதமர்: அடுத்து என்ன?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய பிரதமர் ஒரு வழியாக தனது பிரெக்சிட் ஒப்பந்தத்தை வெற்றி பெறச் செய்த பின்னரும், மீண்டும் முட்டுக்கட்டை போட்டு பிரெக்சிட்டை தாமதப்படுத்திவிட்டனர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

பிரதமர் போரிஸ் ஜான்சனை ஆதரிப்பதுபோல் ஆதரித்துவிட்டு, பின்னர் கவிழ்த்துவிட்டார்கள் அவர்கள்.

அதாவது, நாடாளுமன்றத்தில் பிரதமரின் பிரெக்சிட் ஒப்பந்தத்தை ஆதரிப்பதா இல்லையா என்பதை அறிவதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பு ஒன்றில், ஒப்பந்தத்திற்கு ஆதரவாக 329 பேரும் எதிர்த்து 299 பேரும் வாக்களித்தனர்.

எனவே பிரதமர் போரிஸ் ஜான்சனின் ஒப்பந்தத்திற்கு ஆதரவு கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியை அவர் முழுமையாக அனுபவிக்கக் கூட அனுமதிக்காத நிலையில், எதிர்பாராதவிதமாக மற்றொரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அது, இந்த வார இறுதிக்குள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் ஒப்பந்தத்தை சட்டமாக்கிவிடுவது என அவர் போட்ட திட்டத்தைக் குறித்த வாக்கெடுப்பு.

அந்த வாக்கெடுப்பில், இந்த வார இறுதிக்குள் பிரதமரின் ஒப்பந்தத்தை சட்டமாக்குவதற்கு ஆதரவாக 308 பேரும் எதிர்த்து 322 பேரும் வாக்களித்ததையடுத்து, இந்த வார இறுதிக்குள் பிரதமரின் ஒப்பந்தம் சட்டமாக்கப்படும் திட்டத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுவிட்டது.

எனவே, திட்டமிட்டபடி அக்டோபர் மாதம் 31ஆம் திகதி பிரெக்சிட் நிறைவேறுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், கட்டாயத்தின் பேரில் பிரெக்சிட்டை தாமதப்படுத்தக் கோரி பிரதமர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பிய கடிதத்திற்கு காத்திருக்கும் சூழல் நிலவுகிறது.

அப்படி, பிரெக்சிட் தாமதமாகும் பட்சத்தில், இப்படி ஒரு இக்கட்டான சூழலை மீண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்படுத்திவிட்டதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கையாக முன் கூட்டியே தேர்தல் நடத்தும் திட்டத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் கையில் எடுக்க உள்ளதாக கருதப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்