நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் வாக்கெடுப்பு தொடர்பாக விவாதம்: லண்டன் சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பு பேரணி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஒருபக்கம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் புது பிரெக்சிட் தொடர்பான வாக்கெடுப்பு தொடர்பாக விவாதம் நடந்துகொண்டிருக்கும் நிலையில், லண்டன் சாலைகளில் பிரெக்சிட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் பேரணிகளில் இறங்கியுள்ளனர்.

மக்களின் வாக்கு பிரச்சாரம் என்னும் அமைப்பை ஆதரிக்கும் ஏராளமானோர் சாலைகளில் கூடி, நாடாளுமன்றம் நோக்கி நடக்கத்துவங்கினர்.

அரசியல்வாதிகள், பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் இந்த பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.

பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பிரெக்சிட் ஆலோசகர் Dominic Cummingsஇன் கைப்பாவையாக செயல்படுகிறார் என்பதைக் குறிக்கும் வகையில் செய்யப்பட்ட அவரது பொம்மை வாகனம் ஒன்றில் வைத்து சாலையில் தள்ளிச்செல்லப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களை போரிஸ் ஜான்சனின் ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களிக்க தூண்டுவதற்காக, இந்த பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பிரெக்சிட் ஆதரவாளர்களும் அவர்களுக்கு எதிராக களமிறங்கினாலும், அவர்களது எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. சாலைகளில் பாதுகாப்புக்காக பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்