பிரெக்சிட்: பிரதமர் போரிஸ் ஜான்சனின் ஒப்பந்தத்தில் அப்படி என்ன உள்ளது?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு வழியாக பிரெக்சிட் தொடர்பில் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.

நிராகரிக்கப்பட்ட தெரஸா மேயின் ஒப்பந்தத்தின் இல்லாத என்ன விடயம் தற்போதைய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் ஒப்பந்தத்தில் இருக்கிறது? ஒப்பந்தத்தின் முக்கிய விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவின் ஒரு பகுதியாகிய வட அயர்லாந்து பிரித்தானியாவின் சுங்க எல்லைக்குள்தான் இருக்கும், ஆனால் அங்கு வரும் பொருட்கள் அனைத்திற்கும் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய விதிகளும் பொருந்தும்.

ஆனால், அயர்லாந்து நாட்டில் சுங்க சோதனைகள் இருக்காது. அதற்கு பதிலாக பிரித்தானிய துறைமுகங்களில் சுங்க சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

பிரித்தானியாவிலிருந்து வட அயர்லாந்துக்கு கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கு, அவை அங்கேயே இருந்துவிடும் பட்சத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிகள் கிடையாது.

பயணிகள், அயர்லாந்து எல்லைக்குள் கையில் கொண்டு செல்லும் அவர்களது சொந்த உடைமைகளுக்கும், ஒரு முறை மட்டும் கொண்டு செல்லப்படும் உடனடியாக பயன்படுத்தப்படும் பொருட்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிகள் கிடையாது.

பொருட்கள் அயர்லாந்து எல்லையையும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையையும் கடக்காத வரையில் பிரித்தானிய வரிகள் மட்டுமே வசூலிக்கப்படும்.

பிரெக்சிட்டுக்குப்பின், தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதற்கு, வட அயர்லாந்து சட்டசபை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்புதல் அளிக்கவேண்டும்.

மேலும் விரிவான ஒரு தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள், இரண்டாம் கட்ட ஐரோப்பிய ஒன்றிய - பிரித்தானிய பேச்சுவார்த்தைகளின்போது மேற்கொள்ளப்படும்.

சேவைகள் மற்றும் தடையற்ற முதலீடு தொடர்வது தொடர்பான ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு பக்கங்களிலும் விருப்பம் காணப்படுகிறது.

அத்துடன் சுற்றுச்சூழல், சீதோஷ்ணம், பணியாளர்களின் உரிமைகள் மற்றும் பிற விதிகளில் உயர் தரத்தை கடைபிடிக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் - இதுதான் பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்வைத்துள்ள முக்கிய சலுகையாகும்.

இந்நிலையில், இந்த ஒப்பந்தம் நாளை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கும் வாக்கெடுப்பில் வெற்றிபெறவேண்டும்.

எனவே பிரதமர் போரிஸ் ஜான்சன், நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்டு, ஒப்பந்தத்திற்கு ஆதரவு கோரும் முயற்சியில் இறங்க உள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்