பிரித்தானியாவில் முன்கூட்டியே தேர்தல் நடத்தக்கோரிய தீர்மானம் தோல்வி.. போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவு!

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தக்கோரிய தீர்மானம் தோல்வியை தழுவியதால், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தொடர் பின்னடைவாக அமைந்துள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரித்தானியா வெளியேறும் ‘பிரெக்சிட்’ நடவடிக்கையை நிறைவேற்ற தவறியதால், பிரதமர் தெரசா மே பதவி விலகினார்.

அதனைத் தொடர்ந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட போரிஸ் ஜான்சன், பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு பிரித்தானிய எம்.பி.க்கள் ஆதரவு அளிக்கவில்லை என்றாலும், ஒப்பந்தம் இன்றியே பிரெக்சிட் நிகழும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

எனவே, ஒப்பந்தம் இன்றி பிரெக்சிட் நிறைவேற்றப்படுவதற்கு கடும் எதிர்ப்பு நிலவியது. அதன் பின், பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக போரிஸ் ஜான்சன் அரசு தாக்கல் செய்த முதல் மசோதாவை, பிரித்தானிய எம்.பி.க்கள் தோற்கடித்தனர்.

இதற்கு முன்பாக கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த பிலிப் லீ என்ற எம்.பி, கட்சியில் இருந்து விலகியதால் நாடாளுமன்றத்தில் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்தார். மேலும் அந்த கட்சியின் 21 எம்.பி.க்கள் அரசு தரப்பு கொண்டு வந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.

Reuters

இதனைத் தொடர்ந்து, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். இந்நிலையில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரித்தானியா ஒப்பந்தம் இன்றி வெளியேறுவதற்கு தடைவிதிக்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதன் காரணமாக பிரெசிட் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்படும். மேலும், ஒப்பந்தம் இன்றி பிரெக்சிட்டை நிறைவேற்றும் போரிஸ் ஜான்சனின் எண்ணம் பொய்த்தது. அடுத்த மாதம் 15ஆம் திகதி பிரித்தானிய பொதுத்தேர்தலை நடத்த வலியுறுத்தும் தீர்மானத்தை போரிஸ் முன்மொழிந்தபோது, அதற்கு எதிராக 298 வாக்குகளும், ஆதரவாக 56 வாக்குகளும் பதிவாகின.

இதனால், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்கூட்டியே பிரெக்சிட்டை நிறைவேற்றிவிடலாம் என்ற போரிஸ் ஜான்சனின் திட்டம் கேள்விக்குறியாகி, அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், பிரெக்சிட்டுக்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு போரிஸ் ஜான்சன் தள்ளப்பட்டுள்ளார்.

இதனால், பிரெக்சிட் விவகாரத்தில் தெரசா மே சந்தித்த அதே சரிவை போரிஸ் ஜான்சன் காண வாய்ப்பிருக்கிறது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்