பிரித்தானியாவில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்: வீடியோ

Report Print Vijay Amburore in பிரித்தானியா

14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு விமானத்தில் தப்ப முயன்ற குற்றவாளியின் வீடியோவினை பிரித்தானிய பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 14 வயது சிறுமி மாயமாகிவிட்டதாக அவருடைய தாய் புகார் கொடுத்ததை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். மறுநாள் காலையில் அந்த சிறுமி ஹவுன்ஸ்லோ ரயில் நிலையத்தில் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார்.

பின்னர் அந்த சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பெயர் தெரியாத ஒரு நபரை சந்திக்க சென்ற போது அவர் ஓட்டலுக்கு அழைத்து சென்று தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக மட்டும் கூறியுள்ளார்.

வேறு எந்த தகவலும் கிடைக்காததால் திணறிய பொலிஸார், அந்த சிறுமியின் செல்போனில் இருந்த செல்பி புகைப்படத்தை வைத்து ஓட்டலை அடையாளம் கண்டு அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது Ali-Jamac (34) என்கிற நபர் Diddie என பொய்யான பெயரில் அறை பதிவு செய்திருந்தது தெரியவந்தது. அவர் பயன்படுத்திய காரை வைத்து Ali-Jamac-ஐ அடையாளம் கண்ட பொலிஸார் கைது செய்வதற்கான வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர்.

அப்போது Ali-Jamac ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து எத்தியோப்பியாவுக்குச் செல்லும் விமானம் ஒன்றில் அமர்ந்திருந்ததை பொலிஸார் கண்டறிந்தனர். விமானம் புறப்படுவதற்கு அரை மணிநேரம் மட்டுமே இருந்த நிலையில், விரைந்து செயல்பட்ட பொலிஸார், குற்றவாளியை அதிரடியாக கைது செய்தனர்.

அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 19 ம் திகதி அன்று 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்ட வீடியோவினை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தின் போது 28 மணி நேரம் உறங்காமல் வேலை செய்த பொலிஸாரையும் உயரதிகாரி பாராட்டியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers