லண்டனுக்கு யார் செலவில் சென்றேன்? ஈழத்தமிழர்கள் முன்னால் நடந்தது இதுதான்.. மெளனம் கலைத்த திருமாவளவன்

Report Print Raju Raju in பிரித்தானியா
731Shares

லண்டனில் நடந்த கூட்டத்தில் ஈழத்தமிழர்களிடம் திருமாவளவன் கட்சிக்காக நிதி கேட்டார் என தகவல் வெளியான நிலையில் அதை மறுத்துள்ள திருமாவளவன் இது தொடர்பாக நீண்ட விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

இது குறித்து பிபிசி தமிழுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.

சமீபத்தில் லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட திருமாவளவன் அங்கே கூடியிருந்தவர்களிடம் நிதியுதவி கேட்டதாகவும், அப்போது அங்கே குழுமியிருந்த ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் பணம் தானே? எடுத்துக்கொள் என்று வீசி எறிந்து கடுமையாக நடந்து கொண்டதாகவும் செய்திகளுடன் வீடியோ வெளியானது.

ஆனால் பணத்தை யாரும் வீசவில்லை என்றும், துண்டு காகித்தை கிழித்து வீசியதாகவும் பின்னர் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஈழத்தமிழர்களிடம் பணம் எதுவும் கேட்கவில்லை என கூறிய திருமாவளவன் லண்டனில் நடந்த விடயம் குறித்து முழுவதுமாக விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறுகையில், விம்பம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நீண்ட காலமாகவே இம்மாதிரி ஒரு கூட்டத்தை நடத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஆகஸ்ட் 24ஆம் திகதி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. 25ஆம் திகதி SOAS பல்கலையில் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாகவே, இந்த அமைப்பு புலிகளுக்கு எதிரானவர்கள், புலிகள் மீது விமர்சனம் கொண்டவர்களால் நடத்தப்படும் அமைப்பு. அதில் திருமாவளவன் எப்படி பங்கேற்கலாம் என பலரும் சமூக வலைத்தளங்களில் எழுதியதாகச் சொன்னார்கள்.

இந்த நிலையில் அன்று கூட்டம் துவங்கியதும் ஒருவர் கவிதை படித்தார். பிறகு நூல் திறனாய்வு துவங்கியது. அந்தத் தருணத்தில் திடீரென கூட்டத்திலிருந்து ஒருவர் சத்தம்போட்டார். ஆனால், அவர் என்ன பேசினார் எனத் தெரியவில்லை. கையில் மு.க. ஸ்டாலின் படமும் சோனியா காந்தியின் படமும் வைத்திருந்தார்.

பிறகு இன்னொருவர் எழுந்தார். அவர் கலைஞர், அண்ணா படங்களை வைத்திருந்தார். அவர்கள் தொடர்ந்து சத்தமிட்டார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றே புரியவில்லை. விழா அமைப்பாளர்களில் ஒருவர், அவர்கள் குடித்துவிட்டு இவ்வாறு செய்கிறார்கள் என்று கூறினார்.

பிறகு அவர்கள் விழா அமைப்பாளர்களால் வெளியேற்றப்பட்டனர்.

பிறகுதான் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல் கூட்டணி குறித்து கேள்வியெழுப்பியதாகக் கூறினார்கள். நான் அவர்கள் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேன் என்று சொன்னேன். ஆனாலும் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சத்தம்போட்டவர்கள் வெளியேறும்போது வாசலில் இருந்த போஸ்டர்களைக் கிழித்துவிட்டுச் சென்றதாகச் சொன்னார்கள். அடுத்த நாள் SOASல் கூட்டம் சிறப்பாகவே நடந்தது

அந்தக் கூட்டத்தில் மட்டுமல்ல, வேறு எங்குமே வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்களிடம் பணம் கொடுங்கள் என்று நான் கேட்டதில்லை. தேர்தல் செலவுக்குக்கூட கேட்டதில்லை. இது முழுக்க முழுக்க அவதூறு. நான் உட்பட மூன்று பேர் எங்கள் செலவில்தான் லண்டன் சென்றுவந்தோம் என திருமாவளவன் கூறினார்

விம்பம் அமைப்பைச் சேர்ந்தவரும் அந்த விழாவில் கலந்துகொண்டவருமான சின்னய்யா ராஜேஷ்குமார் கூறுகையில்,

திருமாவளவன் பணம் கேட்டதாகச் சொல்வது மிக மிகத் தவறு. கூட்டம் துவங்கும்போது, நாலைந்து பேர் கூட்டத்தை குழப்பும் நோக்கில் வந்து கூச்சல் போட்டு, சோனியா, கருணாநிதி, ராஜபக்சே படங்களை காட்டி அவற்றை கிழித்தனர்.

அவர்களை மண்டபத்தில் இருந்து வெளியேற்றிய பின் கூட்டம் ஒழுங்காக நிகழ்ந்தது.

திருமாவளவன் பணம் திரட்டும் நோக்கில் வரவில்லை. அவரது புத்தகமான ‘அமைப்பாய் திரள்வோம்‘ வெளியீட்டில் கலந்து கொள்ளவும் SOAS இல் 'விடுதலை சிறுத்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள்' என்ற தலைப்பில் பேசவுமே வந்தார் என கூறியுள்ளார்.

- BBC - Tamil

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்