14 வருடங்களாக விமானத்தில் பயணித்த தம்பதிக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை.. எங்கள் மேல் தவறில்லை என குமுறல்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த ஒரு தம்பதி 14 ஆண்டுகளாக குறித்த விமானம் ஒன்றில் தொடர்ந்து பயணித்து வந்த நிலையில், இனி அவர்கள் அதில் பயணிக்க முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது தம்பதியை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Liverpool-ஐ சேர்ந்தவர் கென்னி ரைன்பர்ட். இவர் மனைவி மேரி ரைலன்ஸ்.

இந்த தம்பதிக்கு ஸ்பெயினில் ஒரு பெரிய பங்களா உள்ளது, இதையடுத்து மாதம் ஒரு முறை easyJet விமானம் மூலம் ஸ்பெயினின் Alicante நகருக்கு இருவரும் சென்று வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் Alicante நகருக்கு செல்ல கென்னியும், மேரியும் முடிவு செய்தனர்.

அப்போது அவர்களின் நண்பர் ஒருவர் Half Price 36522 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் easyJet விமான பயணச்சீட்டை பாதி விலைக்கு கொடுப்பதாக விளம்பரம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து அதை தொடர்பு கொண்ட கென்னி பாதி விலையில் விமான டிக்கெட்களை வாங்கினார்.

இதையடுத்து விமான நிலையத்துக்கு சில தினங்களுக்கு முன்னர் இருவரும் வந்தனர், அப்போது அவர்களின் பயணச்சீட்டை அதிகாரிகள் சோதனை செய்த போது போலியான மோசடி சீட்டு என தெரியவந்தது.

இதையடுத்து விமான நிலையத்தில் இருந்து சில மணி நேரம் கழித்து தம்பதி வெளியேற்றப்பட்ட நிலையில் இனி அவர்கள் easyJet விமானத்தில் வாழ்நாள் முழுவதும் பயணிக்க முடியாது என அந்நிறுவனம் தடை விதித்துள்ளது.

இது தம்பதிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அவர்கள் கூறுகையில், எங்களை ஒரு குற்றவாளிகள் போல விமான நிலையத்தில் அமர வைத்தனர்.

2005ல் இருந்து இந்த விமானத்தில் செல்கிறோம், அதற்காக கூட எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை.

எங்களுக்கு பாதி விலையில் பயணச்சீட்டை விற்ற நிறுவனத்திடம் முன்னரே விசாரித்தோம், அவர்கள் மொத்தமாக பயணச்சீட்டுகளை வாங்கி சலுகையில் விற்பதாக எங்களிடம் கூறியதால் அதை நம்பினோம்.

இனி easyJet விமானத்தில் பயணிக்க முடியாது என எங்களுக்கு தடை விதிக்கப்பட்டது கேலிக்குரியதாகும் என கூறியுள்ளனர்.

மேரி ஆசிரியராக பணி செய்வதால் வெள்ளிக்கிழமை இரவில் தான் easyJet விமானத்தில் ஸ்பெயின் செல்வார், பின்னர் ஞாயிறு மாலை பிரித்தானியாவுக்கு வந்துவிடுவார்.

இப்படி அவர்களுக்கு ஏற்ற நேரத்தில் easyJet விமானம் மட்டுமே புறப்பட்டு செல்வதால், அவர்களை இந்த தடை பெரிதும் பாதித்துள்ளது.

இதனிடையில் இது தொடர்பாக பேசிய easyJet செய்தி தொடர்பாளர், தம்பதியிடம் எங்கள் அதிகாரிகள் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

மூன்றாம் நபரை நம்பியெல்லாம் விமான பயணச்சீட்டுகள் வாங்கி ஏமாறாதீர்கள், எங்கள் நிறுவனத்தை மட்டுமே பயணச்சீட்டு விடயத்தில் அணுகுங்கள் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்