லண்டனில் இந்திய பிரதமர் மோடி திறந்து வைத்த அம்பேத்கர் மியூசியத்திற்கு சிக்கல்: வெளியான பின்னணி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

வடக்கு லண்டனில் இந்திய பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட அம்பேத்கர் அருங்காட்சியகத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கு லண்டனில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தில் 1921 மற்றும் 1922 காலகட்டத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் வசித்துள்ளார்.

குறித்த கட்டிடத்தை இந்தியாவின் மராட்டிய அரசு ரூபாய் 31 கோடி செலவில் வாங்கியது. அதன் பின்னர் அந்த கட்டிடத்தை லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் பராமரித்து வருகிறது.

தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள இந்த கட்டிடமானது கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி லண்டனுக்கு வந்திருந்தபோது திறந்து வைத்துள்ளார்.

ஆனால் குடியிருப்பு ஒன்றை அருங்காட்சியகமாக மாற்ற உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அந்த குடியிருப்பு கட்டிடம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கட்டடத்தை நிரந்தரமாக அருங்காட்சியகமாக மாற்றுவதற்காக இந்தியத் தூதரகம், லண்டன் மாநகரத் திட்டக் குழுவிடம் விண்ணப்பித்தது.

ஆனால், மக்கள் குடியிருக்கும் பகுதியில் இந்தக் கட்டிடம் இருப்பதால் அதை அருங்காட்சியகமாக மாற்ற லண்டன் நகரத் திட்டக் குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

மீண்டும் கட்டிடத்தை மக்கள் வசிக்கும் குடியிருப்பாகப் பயன்படுத்த ஒப்படைக்க வேண்டுமென்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

125 ஆண்டுக்காலம் பழைமையான அந்த நாலு மாடி கட்டிடம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளதால், திரளான இந்தியர்கள் இங்கு வருவதாகவும், அவர்கள் அதிக சத்தம் எழுப்புவதால்,

வாரத்தின் ஏழு நாட்களும் தாங்கள் பாதிக்கப்படுகிறோம் என உள்ளூர் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மேல்முறையீடு மனு Camden council அமைக்கப்பட்டக் குழுவிடம் செப்டம்பர் 24 ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்