பிரித்தானியா டேங்கர் சிறைபிடிப்பு விவகாரம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்டது ஈரான்

Report Print Basu in பிரித்தானியா

ஈரானால் கைப்பற்றப்பட்ட பிரித்தானியா எண்ணெய் டேங்கர் விரைவில் விடுவிக்கப்பட உள்ளது என்று ஸ்வீடனுக்கு உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன என ஸ்வீடனின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஆதாரங்களை மேற்கோளிட்டு ஸ்வீடிஷ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியா நிறுவனத்திற்கு சொந்தமான ஆனால் ஸ்வீடன் நிறுவனமான ஸ்டெனா பல்க்கால் இயக்கப்படும் ஸ்டெனா இம்பீரோ டேங்கர் கப்பலை, யூலை 19ம் திகதி ஈரானின் புரட்சிகர காவலர்களால் வளைகுடாவின் வாயில் உள்ள ஜலசந்தியைக் கடந்து சென்ற போது கைப்பற்றினர்.

முன்னதாக, ஜிப்ரால்டரில் கடற்பகுதியில் வைத்து ஈரானிய டேங்கர் கப்பலை பிரித்தானியா கைப்பற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ஸ்டெனா இம்பீரோவை கைப்பற்றப்பட்டது. எனினும், சமீபத்தில் ஈரான் டேங்கர் விடுவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரானால் கைப்பற்றப்பட்ட பிரித்தானியா டேங்கரை அந்நாட்டு அரசு விடுவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பிரித்தானியா டேங்கரை விடுவிப்பது குறித்து நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருப்பதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜவாத் ஸரீஃப், இந்த வார தொடக்கத்தில் ஸ்வீடனின் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோட் வால்ஸ்ட்ரோமுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஸ்டெனா பல்கின் தலைமை நிர்வாகி எரிக் ஹனலையும் சந்தித்தார்.

வால்ஸ்ட்ரோம் மற்றும் ஸரீஃப் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் பற்றிய ஆதாரத்தை மேற்கோள் காட்டி, ஸ்டெனா இம்பீரோ கப்பல் சில நாட்களில் விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஸ்வீடிஷ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், ஸ்டெனா இம்பீரோவிற்கு விரைவான தீர்வு கிடைக்கும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஸரீஃப் அவர்களே பகிரங்கமாக கூறியதை நாங்கள் சாதகமாகப் பார்க்கிறோம், ஆனால் சந்திப்பின் போது நடந்த உரையாடல்களை நாங்கள் வெளியிடவில்லை என்று ஸ்வீடனின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்