பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், சிறைச்சாலைகளில் 10,000 இடங்களை அதிகரிக்க மிகப்பெரிய தொகையை ஒதுக்கீடு செய்ய உள்ளார்.
நாளைய தினம் லண்டனில் உள்ள Downing Street பகுதியில், குற்றவியல் நீதி முறையை மேம்படுத்துவது குறித்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் விவாதிக்க உள்ளார். இதில் காவல்துறை உயரதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் சிறைக்காவலர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில், பிரித்தானிய சிறைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதை கையாள்வதற்கும், குற்றங்கள் ஏற்படாமல் தடுக்கவும் மேலும் 10 ஆயிரம் இடங்களை அதிகரிக்க 2.5 பில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், கடுமையான பாலியல் மற்றும் வன்முறை குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனைச் சட்டங்களை இயற்றுவதற்கான, தனது பிரச்சார உறுதிமொழியை நிறைவேற்ற இந்த நடவடிக்கை தன்னை அனுமதிக்கும் என்று Mail-யில் எழுதியுள்ளார்.
இதுகுறித்து நீதி செயலாளர் ராபர்ட் பாக்லேண்ட் கூறுகையில், ‘குற்றங்களை குறைத்து, சட்டத்தை மதிக்கும் மக்களைப் பாதுகாக்கும் நீதிமுறையை உருவாக்குவதற்கான எங்கள் தைரியமான திட்டத்தின் மையப்பகுதியாக பிரதமர் சிறைகளில் இடங்களை அதிகரிக்க உள்ளார்.
அதிகப்படியான மற்றும் சிறப்பான சிறைகளின் இடங்கள், எதிர்காலத்தில் சிறிய அளவில் குற்றம் இழைப்பவர்கள் மற்றும் வரி செலுத்துபவர்களின் சுமைகளை குறைப்பதற்கானதாகவும் இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.
கணக்கெடுப்பின்படி, பிரித்தானிய மற்றும் வேல்ஸில் உள்ள 62 சதவித சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.