10வது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட 6 வயது சிறுவன்: உதவி கேட்டு கதறிய தாய்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டனில் அமைந்துள்ள Tate Modern எனப்படும் கட்டிடத்தின் 10வது மாடியிலிருந்து ஆறு வயது சிறுவனை தூக்கி வீசி கொலை செய்ய முயன்றதாக 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

லண்டனில் உள்ள Tate Modern கட்டிடத்தின் 10வது மாடியில் இருந்து ஆறு வயது சிறுவன் திடீரென தூக்கி வீசப்பட்டுள்ளான். உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 2.40 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

தன்னுடைய மகன் மாயமாயிருப்பதை அறிந்துகொண்ட சிறுவனின் தாய் திடீரென, என்னுடைய மகன் எங்கே என சத்தமாக கதறி அழ ஆரம்பித்துள்ளார். உடனே அங்கிருந்த மக்கள் கூட்டம் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு 10 பொலிஸ் வாகனங்கள், 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளன. கட்டிடத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் அதிர்ஷ்டவசமாக 5 மாடியின் விளிம்பில் சிக்கிக்கொண்டான். உடனே ஏர் ஆம்புலன்சிற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அங்கிருந்து வேகமாக மீட்கப்பட்ட சிறுவன் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் பொலிஸார் சோதனை மேற்கொள்வதற்காக கட்டிடத்தில் இருந்த பொதுமக்கள் யாரும் வெளியேற கூடாது என உத்தரவிட்டனர். நீண்ட நேர சோதனைக்கு பின் சந்தேகத்தின் பேரில் 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பின்னர் மாலை 5.30 மணிக்கு பொதுமக்களை அங்கிருந்து வெளியேற பொலிஸார் அனுமதி கொடுத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்