பிரித்தானியாவின் ஆளுங்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போரிஸ்: நிகழ்ச்சியில் ஒரு முக்கியமான ஆளைக்காணோம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவின் அடுத்த பிரதமாரவதற்கு ஒரு படி மட்டுமே இருப்பதற்கு அடையாளமாக, ஆளுங்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் போரிஸ் ஜான்சன்.

அதற்கான நிகழ்ச்சியில், இதுவரை போரிஸ் ஜான்சனுடன் தலையே காட்டாத ஜான்சனின் தந்தை, சகோதரி, சகோதரர் என பலரும் கலந்து கொள்ள, ஒரு முக்கியமான நபரை மட்டும் காணோம்!

அது போரிஸ் ஜான்சனின் காதலியான கேரி சைமண்ட்ஸ்...

சரியாக போரிஸ் ஜான்சன் பிரதமர் போட்டியில் உச்சத்தில் இருக்கும் போது, அவருக்கும் அவரது காதலிக்கும் ஏற்பட்ட ஒரு சண்டை, அவர்கள் வீட்டு வாசலில் பொலிசார் குவிவதற்கு காரணமாக அமைந்ததும், அது அரசியல் வட்டாரத்திலும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி, பின்னர் இருவரும் சேர்ந்து கைகோர்த்து அமர்ந்திருந்த புகைப்படம் வெளியாகி, என்ன நடக்கிறது என மக்களை மண்டையைப் பிய்த்துக் கொள்ள வைத்ததும் நினைவிருக்கலாம்.

இந்நிலையில், போரிஸ் ஜான்சன் இதுவரை தனது மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாததால், அவரது காதலியான கேரி, பொது இடங்களில் சற்று அடக்கி வாசிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி தனது வாழ்நாள் கனவான பிரதமராகும் கனவு பலிக்கும் நேரத்தில், தான் போரிஸ் ஜான்சனின் முக்கியத்துவத்தை திசை திருப்ப விரும்பவில்லை என அவர் தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.

இதற்கிடையில், போரிஸ் ஜான்சன், நாளை அரசு அமைப்பதற்கான அழைப்பை மகாராணியிடமிருந்து ஏற்றுக் கொள்வதற்காக பக்கிங்காம் அரண்மனைக்கு செல்ல இருக்கிறார். அப்போதும் கேரி அவருடன் செல்ல மாட்டார் என தெரிகிறது.

அதேபோல் புதிதாக பொறுப்பேற்றுக் கொள்ளும் பிரதமர்கள், பிரதமர் இல்லத்திற்குள் செல்வதற்கு முன், தங்கள் துணையுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பது ஒரு பாரம்பரியம்.

ஆனால் அதிலும் கேரி பங்கேற்க மாட்டார் என தெரிகிறது, காரணம், அவர் அங்கிருப்பது, மக்களின் கவனத்தை திசை திருப்பும் என அவர் கருதுகிறாராம். ஆனால், போரிஸ் ஜான்சன் பிரதமர் இல்லத்திற்கு குடிபெயர்ந்த பின்னர், கேரியும் அவருடன் இணைந்து கொள்வாராம்.

என்றாலும், போரிஸ் ஜான்சனுக்கு எல்லா விதத்திலும் பின்புலத்தில் நின்று முக்கிய பங்காற்ற இருக்கும் கேரி, பிரெக்சிட் குறித்த தனது அணுகுமுறைக்கு ஆதரவு கோருவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும்போது அவருடன் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்