பிரித்தானியாவின் புதிய பிரதமர்! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவின் புதிய பிரதமராகவும் கன்சர்வ்வேட்டிவ் கட்சி தலைவராகவும் போரிஸ் ஜான்சன் (55) தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

பிரித்தானியாவில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் முக்கியத் தலைவர்களான போரிஸ் ஜான்சன், ஜெரிமி ஹன்ட் இடையே பிரதமர் பதவிக்கு போட்டி ஏற்பட்டது. பிரதமரைத் தேர்வு செய்வதற்கான இறுதிக்கட்ட தேர்தல், திங்கள்கிழமை மாலை நிறைவடைந்தது.

இந்நிலையில் பிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பதவிக்கான போட்டியில் ஜெர்மி ஹண்ட் 46, 656 வாக்குகள் பெற்ற நிலையில், போரிஸ் ஜான்சன் 92,153 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றிக்கு பின்னர் பேசிய போரிஸ் ஜான்சன், பிரித்தானிய பிரதமர் தெரீசா மேயின் அமைச்சரவையில் இதுவரை பணியாற்றியது தனக்கு பெருமை என்றும், கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பாக பிரதமர் பதவிக்காக நடந்த போட்டியில் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து நாளை மதியம் பிரித்தானிய மகாராணியை சந்திக்கும் போரிஸ் ஜான்சன், நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

அதே நேரத்தில் தனது பிரதமர் பதவியை தெரசா மே ராஜினாமா செய்யவுள்ளார்.

முன்னதாக ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகுவதில் இழுபறி நீடித்து வருவதன் எதிரொலியாக, பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் தெரசா மே கடந்த மே மாதம் அறிவித்தார்.

இதையடுத்து பிரதமர் பதவிக்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்