லண்டன் நீதிமன்றத்தில் இன்று விஜய் மல்லையா மீதான விசாரணை..! நாடு கடத்தப்படுவாரா?

Report Print Kabilan in பிரித்தானியா

தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படக் கூடாது என்று லண்டன் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்தியாவில் பல்வேறு வங்கிகளிடம் இருந்து ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல், பிரித்தானியாவுக்கு தப்பி சென்றார்.

அதனைத் தொடர்ந்து, அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கி இருந்தது.

இந்திய அரசு அளித்த ஆவணங்களின் அடிப்படையில், மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த கடந்த பிப்ரவரி மாதம் பிரித்தானியா உத்தரவிட்டது. ஆனால், இதனை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா எழுத்துப்பூர்வ மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதன் பின்னர், ஏப்ரல் 5ஆம் திகதி குறித்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, எழுத்துப்பூர்வமற்ற ‘ஓரல் மேல்முறையீட்டு’ வழக்காக பிரித்தானியா மற்றும் வேல்ஸ் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை மல்லையா அணுகினார்.

Reuters

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் இன்று நடக்கிறது. விஜய் மல்லையா தரப்பு வழக்கறிஞர்கள் இதில் கூடுதல் வாதங்களை முன் வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்த மனு மீதான தீர்ப்பை விசாரணையை முடித்த பின்னர், நீதிபதிகள் ஒத்தி வைக்க அதிகமான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இன்றைய விசாரணையில், ஒருவேளை விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்படும் பட்சத்தில், அடுத்த 28 நாட்களில் அவரை இந்தியாவுக்கு கொண்டுவர முடியும். மாறாக மனு ஏற்கப்பட்டால் விரிவான விசாரணை நடைபெறும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்