Brexit: என் வாயில் துப்பாக்கியை வைத்தாலும் தெரஸா மேயை ஆதரிக்க மாட்டேன்: முரண்டு பிடிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், என் வாயில் துப்பாக்கியை வைத்தாலும் தெரஸா மேயின் பிரெக்சிட் ஒப்பந்தத்தை ஆதரிக்க மாட்டேன் என்று முரண்டு பிடித்து வரும் நிலையில், நாளை நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில் தன்னை ஆதரிக்குமாறு தெரஸா மே, DUP கட்சியை கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினரான Mark Francois, என் வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டினாலும், தெரஸா மேயின் பிரெக்சிட் ஒப்பந்தத்தை ஆதரிக்க மாட்டேன். பிரதமர் யார் என்பதன் அடிப்படையில் நான் பிரெக்சிட்டுக்கு வாக்களிக்க முடிவு செய்யவில்லை.

நான் அந்த ஒப்பந்தத்தை படித்துப் பார்த்ததால்தான் அதற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டேன் என்கிறேன்.

அதில் எதுவும் மாறவில்லை, எனவே நான் அதை எதிர்த்து வாக்களித்து அதை தோற்கடிப்பேன்.

பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று வாக்களித்திருக்கிறார்கள், ஆகவே வெளியேறிவிடுவோம், அவ்வளவுதான் என்கிறார்.

இதற்கிடையில், தான் பதவி விலகி விடுவதாகக் கூறியும் இன்னும் தனது ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்து வராததால், பொதுத் தேர்தல் ஒன்று வராமல் தவிர்ப்பதற்காகவாவது தனக்கு ஆதரவளிக்குமாறு DUP கட்சியை கெஞ்சிக் கொண்டிருக்கிறார் தெரஸா மே.

இது போதாதென்று ERG குழுவைச் சேர்ந்த 25 உறுப்பினர்களும் தாங்கள் தெரஸா மேயை ஆதரிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர்.

தெரஸா மேயின் திட்டம் மீண்டும் தோல்வியடைந்தால், ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஒரு மென் பிரெக்சிட்டைக் கோரவோ அல்லது இரண்டாவது வாக்கெடுப்பு நடத்தவோ நாடாளுமன்றம் அவரை வற்புறுத்தலாம்.

அப்படி நடக்கும் பட்சத்தில் அது கன்சர்வேட்டிவ் கட்சியின் கொள்கைக்கு எதிரானது என்பதால், பிரதமர் தெரஸா மே பொதுத்தேர்தலை நடத்தும் முடிவுக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்