துப்பாக்கிசூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க நியூசிலாந்து செல்லும் இளவரசர் வில்லியம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

துப்பாக்கி சூடு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை கௌரவிக்கும் விதமாக ராணி சார்பில் இளவரசர் வில்லியம் நியூசிலாந்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த 12-ம் திகதி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 50 பேர் பலியானதோடு, 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவமானது உலக நாடுகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கு பல நாட்டு தலைவர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்தனர்.

இந்த நிலையில் பிரித்தானிய இளவரசர் வில்லியம் வரும் ஏப்ரல் மாதம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை கௌரவிக்கும் விதமாக, ராணியின் சார்பில் நியூசிலாந்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதத்திலும், சமீபத்திய வாரங்களில் நியூசிலாந்து வீரர்கள் காட்டிய அசாதாரண இரக்கத்தையும் ஒற்றுமையையும் பாராட்டும்படி, இளவரசர் வில்லியம் ஒரு சிறிய பயணத்தை மேற்கொள்ளவிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

இதனை கென்சிங்டன் அரண்மனை நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. இதில் இளவரசி கேட் கலந்துகொள்ள மாட்டார் எனவும் தெரியவந்துள்ளது.

முன்னதாக இளவரசர் சார்லஸ் கடந்த 2011ம் ஆண்டு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நியூசிலாந்திற்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்