என்னை கவனிக்க யாருமில்லை.... பிரித்தானிய அமைச்சருக்கு 11 வயது சிறுமி எழுதிய உருக்கமான கடிதம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

என்னை கவனிக்க யாருமில்லை என 11 வயது சிறுமி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒரு உருக்கமான கடிதத்தினை எழுதியிருக்கிறார்.

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் டிம்ஸ்-க்கு 11 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய குடும்ப சூழ்நிலை குறித்து கடிதம் எழுதியிருக்கிறார்.

இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், அந்த சிறுமிக்கு எப்படி உதவி செய்யலாம் என இணையதளவாசிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், ஒரு படுக்கையறை மட்டுமே கொண்ட பிளாட்டில் 7 பேருடன் சேர்ந்து தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

நான் பிரித்தானியாவில் தான் பிறந்தேன். ஆனால் இதுவரை ஒருநாள் கூட நல்ல நாளாக எனக்கு அமைந்தது கிடையாது. ஏனென்றால் இந்த பிளாட் எனக்கு மோசமான நினைவுகளையே மீண்டும் நினைவிற்கு கொண்டு வருகிறது.

நான் என்னுடைய இரண்டு மூத்த சகோதரிகளுடன் தான் உறங்கி கொண்டிருக்கிறேன். தினமும் அதிகாலை வேலைக்கு கிளம்பும்பொழுது என்னுடைய தந்தை விளக்கை ஆன் செய்து விடுவார். இதன் காரணமாகவே என்னால் சரியாக தூங்க முடியாமலும், கவனத்தை செலுத்த முடியாமலும் தவிக்கிறேன்.

இது முற்றிலும் அபத்தமானது. ஏனெனில் இன்னும் இரண்டு மாதங்களில் எனக்கு தேர்வு நடக்கவுள்ளது. என்னால் முற்றிலும் வகுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.

வகுப்பில் நான் பின்தங்கிவிட்டேன். ஏனென்றால் யாரும் என்னைப் பற்றி கவலைப்படுவதில்லை. யாரும் என்னை சந்தோஷமாக பார்க்க விரும்பவில்லை. இதனால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை என நான் நினைக்கிறேன்.

"என் நண்பர்கள் எல்லோரும் தங்கள் பிறந்த நாள் விழாக்களில் கலந்துகொள்ள என்னை அழைக்கிறார்கள், ஆனால் என்னால் செல்ல முடியவில்லை, ஏனென்றால் நான் சென்றால், அவர்கள் என் பிறந்த நாளுக்கு அழைக்கப்பட வேண்டும். ஆனால் என் வீட்டில் அதற்கான இடம் இல்லை என்பதால் என்னால் அழைக்க முடியவில்லை.

இந்த முட்டாள்தனமான சூழ்நிலையால் எதையும் நான் கொண்டாட மாட்டேன். இதை சொல்வதற்கு நான் வெட்கப்படுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். நான் உண்மையிலேயே சோகமாக இருக்கிறேன். இந்த வழிகளால் நான் நோய்வாய்ப்பட்டவளாகவும், சோர்வாகவும் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் என் அம்மா அழுவதை பார்த்து நானும் அழுகிறேன்.

"நான் இதைப் பற்றிப் பேச விரும்பியதில்லை. ஆனால் எனக்கு வேறு வழி இல்லை. யாரும் எனக்கு உதவமாட்டார்கள். யாரும் என்னைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்." என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஸ்டீபன் பதிவிட்டுள்ள கடிதத்திற்கு கீழ் இணையதளவாசிகள் பலரும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் இதுகுறித்து விரைவில் கவுன்சிலுக்கு கடிதம் எழுதுவேன் என ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்