பிரித்தானியாவிற்கு சென்ற இரு விமானங்களை நடுவானிலே திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் போயிங் 737 மேக்ஸ் வகை விமானத்திற்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று நடுவானில் பறந்துகொண்டிருந்த இரண்டு விமானங்களை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக எத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ் 8 வகை விமானம் விபத்தில் சிக்கி 157 பேர் பலியானதை தொடர்ந்து, போயிங் 737 மேக்ஸ் 8 மற்றும் 9 வகை விமானங்களுக்கு தடை செய்வதாக பிரித்தானியா மதியம் 1 மணிக்கு அறிவித்தது.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, அயர்லாந்து, ஹாலந்து, ஐஸ்லாந்து மற்றும் இந்தியா ஆகியவையும் தடை உத்தரவினை பிறப்பித்தன.

போயிங் 737 மேக்ஸ் 8 வகை விமானமானது இந்தோனேசியாவில் விபத்தில் சிக்கி 5 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில், தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டிருப்பதாலே, பல நாடுகளும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் ஐரோப்பிய வான்வெளி பாதையில் பறந்து கொண்டிருந்த இரண்டு துருக்கிய ஏர்லைன்ஸ் விமானங்களை திருப்பி அனுப்பி பிரித்தானிய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதில் ஒன்றி கேட்விக் நோக்கியும் மற்றொன்று பர்மிங்ஹாம் நோக்கியும் சென்றுகொண்டிருந்துள்ளது.

முன்னதாக இன்று காலை பேசிய எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி Tewolde Gebremariam, விமானத்தின் உபகரணங்கள் விமானியின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வராததாலே விபத்து ஏற்பட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்