இலங்கை சிறுமிக்கு பிரித்தானியாவில் கிடைத்த பெருமை: குவியும் பாராட்டு மழை

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் தொலைக்காட்சி ஒன்று நடத்திய பிரமாண்டமான நிகழ்ச்சியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ள இலங்கை சிறுமிக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இலங்கையை சேர்ந்த நீலகங்கா உகெல்லே - ஷிரோமி ஜெயசிங்கே என்கிற தம்பதியினர் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 12 வயதில் நிஷி என்கிற மகள் இருக்கிறார்.

நீலகங்கா, பார்க்லேஸ் வங்கியில் துணைத் தலைவராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.

சமீபத்தில் பிரித்தானியாவில் செயல்பாட்டு வரும் சேனல் 4 தொலைக்காட்சியானது ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்தது.

அதில் கலந்துகொள்வதற்காக பிரித்தானிய முழுவதிலுமிருந்தும் 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் விண்ணப்பித்தனர். ஆனால் அதிலிருந்து 19 பேர் மட்டுமே சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதில் ஒருவராக நிஷியும் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

அடுத்தடுத்து சுற்றுகள் முடிந்து இறுதி சுற்றனாது கடந்த சனிக்கிழமையன்று பிரமாண்டமாக நடைபெற்றது. வில்லியம் ஹார்வுட் என்கிற 11 வயது சிறுவனை எதிர்த்து நிஷி போட்டி போட்டு கொண்டிருந்தார்.

எட்டு முதல் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டியில், எழுத்துப்பிழை, கணிதம், ஞாபகசக்தி, சொல்லகராதி, புவியியல் மற்றும் அறிவியல் ஆகியவற்றை கொண்டு போட்டியாளர்களின் திறமை சோதிக்கப்பட்டது.

அப்போது 'neurohypophysis' என்கிற வார்த்தையினை சரியாக உச்சரித்த நிஷி அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாகினார். இதன்மூலம் மட்டுமே நிஷிக்கு 10 புள்ளிகள் கிடைத்ததால், எதிர்த்து போட்டியிட்ட வில்லியம் 5 புள்ளிகள் பின்தங்க ஆரம்பித்தார்.

20 புள்ளிகளுக்கு நடத்தப்பட்ட போட்டியின் இறுதியில் 16 புள்ளிகள் எடுத்து முதலிடத்தை பிடித்திருந்த நிஷி, வெற்றி பெற்றதாக அறிவித்த நடுவர்கள், 'பிரித்தானியாவின் பிரகாசமான இளைஞர்' என்கிற பட்டத்தினை கொடுத்து பெருமைபடுத்தினர்.

இதனை பார்வையாளர்களுடன் அமர்ந்து பார்த்து கொண்டிருந்த நிஷியின் பெற்றோர் மகிழ்ச்சியில் திளைக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதனை தொடர்ந்து மேடையில் ஏறி ஊக்கம் அளிக்கும் வகையில் பேசிய நிஷியின் உரை, நாடு முழுவதிலுமுள்ள பலரின் இதயத்தை தொடும் வகையில் அமைந்திருந்துள்ளது.

இது உண்மையில் நம்பமுடியாதது. வில்லியம் எனக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தார். போட்டியில் நான் நுழைந்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, பெண்கள் கணித அல்லது இயற்பியலைச் செய்ய முடியாதவர்கள் என்ற ஒரு கூற்று நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. அது உண்மை இல்லை என்று காட்ட விரும்புவதற்காகவே நான் இதில் பங்கேற்றேன் என நிஷி பேசியிருந்தார்.

இந்த நிகழ்ச்சியை பார்த்த இளைஞர்கள் பலரும் தற்போது நிஷியை இணையத்தில் பாராட்டி வருகின்றனர். நீங்கள் ஒரு நட்சத்திரம். வளர்ந்து வரும் இளம்பெண்களுக்கு ஒரு முன்மாதிரி என ஒருவர் பதிவிட்டிருந்தார்.

மற்றொருவர், மனித பண்பை உங்களிடம் இருந்து மற்ற சில போட்டியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

வேறு ஒருவர், அற்புதம் நிஷி... சிறப்பான பேச்சு... பெண்கள் பற்றிய ஒரு நல்ல செய்தியினை கூறியிருக்கிறீர்கள். ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருந்தது உங்கள் பேச்சு என பாராட்டி வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்