தீவிரவாதிகளை மணந்த மாணவியால் பிரித்தானியாவுக்கு ஆபத்து: உள்துறைச் செயலர்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் இருந்து சிரியாவுக்கு சென்று தீவிரவாதிகளை மணந்து குழந்தைகளும் பெற்றுக் கொண்ட மாணவியால் பிரித்தானியாவுக்கு ஆபத்து நேரிடலாம் என்பதாலேயே அவரது குடியுரிமையை ரத்து செய்ததாக பிரித்தானிய உள்துறைச் செயலரான சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.

சிரியாவுக்கு சென்று தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த ஷமீமா பேகம் தான் கர்ப்பமாக இருப்பதால் பிரித்தானியாவுக்குள் தன்னை அனுமதிக்குமாறு கோரியிருந்தார்.

ஆனால் அவரது குடியுரிமையை அதிரடியாக ரத்து செய்தது பிரித்தானிய அரசு. தனது குடியுரிமையை ரத்து செய்தது சட்ட விரோதம் என்றும், அதை எதிர்த்து ஷமீமா தரப்பு மேல் முறையீடு செய்யவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், ஷமீமா பிரித்தானியாவுக்கு திரும்பினால் அவர் தீவிரவாத தாக்குதலில் ஈடுபடலாம் என்னும் அச்சம் நிலவுவதாலேயே அவரது குடியுரிமை பறிக்கப்பட்டதாக ஜாவித் தெரிவித்தார்.

மேலும் ஷமீமாவின் பெயர் குறிப்பிடாமல், இத்தகையவர்களை நாட்டுக்குள் அனுமதித்தால், அவர்கள் மற்றவர்களுக்கு தீவிரவாத எண்ணங்களை புகுத்தலாம், தாங்களே தாக்குதல் நடத்தலாம், அல்லது தாக்குதல் நடத்த மற்றவர்களைத் தூண்டலாம் என்றார் ஜாவித்.

இதனால் நாட்டுக்கு எவ்வளவு அபாயம் ஏற்படலாம் என்பதையும் நான் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று கூறியுள்ள ஜாவித், ஐ.எஸ் அமைப்பிலிருந்து திரும்பிவருபவர்களுக்கெதிரான ஆதாரங்களை திரட்டுவது கடினம் என்பதால் அவர்களை தண்டிப்பதும் கடினம் என்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்