கோல்டன் விசாக்கு இடைக்காலத் தடை விதித்த இங்கிலாந்து: யார் யார் பாதிக்கப்படுவார்கள் தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா

உலக பில்லியனர்கள் இங்கிலாந்து குடியுரிமை பெற எளிதாக உதவக் கூடிய டையர் 1 கோல்டன் விசா முறைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் குடியுரிமை வேண்டும் என்ற கோரிக்கையுடன் உலகம் முழுவதிலும் இருந்து அதிகப்படியான பில்லியனர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

இவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதி வழங்கிய பின்னர், அவர்கள் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் பண மோசடி செய்துள்ளதாக வரும் புகார்கள் அதிகரித்துள்ளன.

எனவே கோல்டன் விசா முறைக்கு இடைக்காலத் தடை விதித்தது மட்டும் இல்லாமல் அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி வரும் காலத்தில் கோல்டன் விசாவிற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போது தங்களது நிதி மற்றும் வர்த்தகங்கள் குறித்த தணிக்கையாளர் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

2 மில்லியன் யூரோ முதலீடு செய்து இருக்க வேண்டும். இவற்றைச் செய்தால் மட்டுமே முதற்கட்டமாக 2 ஆண்டுகளுக்கு டையர் 1 விசா அனுமதி வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

மேலும் கோல்டன் விசா விண்ணப்பதாரர்களுக்கு இங்கிலாந்து அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய அளித்து இருந்த அனுமதிகள் நீக்க வாய்ப்புள்ளது என்றும், நிறுவன டிரேடிங் செய்வது கட்டாயம் என்றும் கூறுகின்றனர்.

இங்கிலாந்து அரசு டையர் 1 கோல்டன் விசா வழங்குவதன் மூலம் சட்ட விரோதமாக வெளிநாட்டுக் கோடீஸ்வர்கள் மோசடிகளைச் செய்துவிட்டுத் தப்பிவிடுவதாக உலக நாடுகள் நீண்ட கலமாகவே குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஜூலை மாதம் வரையில் மட்டும் வெளிநாட்டுச் செல்வந்தர்கள் கோல்டன் விசா அனுமதி கேட்டு விண்ணப்பிப்பது 46 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

ஆனால் பண மோசடி புகார்கள் செய்துள்ளவர்கள் அதில் இருந்து தப்பிக்க இந்த விசா முறையைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்ற காரணத்திற்காக இந்த முடிவினை எடுத்துள்ளனர்.

இங்கிலாந்து அரசு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த சென்ற நிதி ஆண்டில் மட்டும் 1,000 செல்வந்தர்களுக்கு டையர் 1 கோல்டன் விசா அளித்துள்ளது.

இந்தியாவில் இருந்து இந்தக் கோல்டன் விசா முறை கீழ் இங்கிலாந்து தப்பிச் சென்று தஞ்சம் புகுந்தவர்களில் விஜய் மல்லையா, நீரவ் மோடி, லலித் மோடி உள்ளிட்டவர்களும் உள்ளதாகக் கூறுகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து குடிவரவு அமைச்சரான கரோலின் நொக்ஸ், "எங்கள் பொருளாதாரம் மற்றும் வணிகம் வளர உதவுவதற்கு உறுதியளிக்கும் சட்டப்பூர்வமான மற்றும் நேர்மையான முதலீட்டாளர்களுக்கு இங்கிலாந்து எப்போதும் திறந்திருக்கும். இருப்பினும் விதிமுறைகளை மீறி மோசடிக்காக எங்களைப் பயன்படுத்துவதை ஏற்க மாட்டோம்” என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்