என்னை குற்றவாளி என கூறுவது தவறானது.. அனைத்து கடனையும் திருப்பி செலுத்த தயார்: விஜய் மல்லையாவின் ட்வீட்

Report Print Kabilan in பிரித்தானியா

வங்கிகளில் பெற்ற அனைத்து கடனையும் திருப்பி செலுத்த தயாராக இருப்பதாக தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் கடனாக பெற்ற ரூ.9 ஆயிரம் கோடியை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார்.

தற்போது பிரித்தானியாவின் லண்டன் நகரில் தங்கியுள்ள அவரை, இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், விஜய் மல்லையா மீதான நாடு கடத்தல் வழக்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் வருகிற 10ஆம் திகதி விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில் தான் வாங்கிய அனைத்து கடன்களையும் திருப்பி செலுத்த தயாராக இருப்பதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

PTI

அவர் கூறுகையில், ‘நான் பொதுத்துறை வங்கிகளின் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்ட குற்றவாளி என அரசியல்வாதிகளும், ஊடகங்களும் உரத்த குரலில் கூறி வருகின்றனர். இவை அனைத்தும் தவறானவை.

கடன் தொகையை செலுத்த கர்நாடக உயர்நீதிமன்றம் முன் ஒப்புக் கொண்டேன். அதன்பிறகும் என்னை நேர்மையான முறையில் நடத்த மறுப்பது வேதனை அளிக்கிறது. விமான எரிபொருள் விலை ஏற்றத்தின் காரணமாகவே எனது கிங் பிஷர் விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது.

கச்சா எண்ணெய் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, ஒரு பேரல் 140 அமெரிக்க டொலர் அளவுக்கு உயர்ந்ததால் கிங் பிஷர் விமான நிறுவனம் பிரச்சனையை எதிர்கொள்ள நேரிட்டது. நஷ்டம் அதிகமானதால் வங்கியில் பணம் பெற வேண்டி வந்தது.

தற்போது நான் கடன் பெற்ற அசல் தொகையில் 100 சதவிதத்தையும் திரும்ப செலுத்த தயாராக இருக்கிறேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் மிகப்பெரிய மதுபான ஆலை குழுமத்தை நடத்தியிருக்கிறேன்.

மாநில அரசுகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை வரியாக அளித்து இருக்கிறேன். கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் மாநிலங்களில் நல்லதொரு வருவாயை தந்துள்ளது. ஆனால், துரதிருஷ்டவசமாக விமான நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது.

இருந்தாலும் தற்போது வங்கிகளுக்கு நான் பெற்ற கடன் தொகையை செலுத்த தயாராக இருக்கிறேன். அதனால் நஷ்டம் எதுவும் இல்லை. என்னை இந்தியாவுக்கு அழைத்து வர வேகமாக தீவிரம் காட்டப்படுகிறது. இது ஒரு சட்டப் பிரச்சனை.

ஆனால், அதில் மிக முக்கியமானது மக்கள் பணம் தான். அதை 100 சதவிதத்தையும் முழுமையாக திரும்ப தருவதாக கூறுகிறேன். வங்கிகளும், அரசும் அதை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். நான் திரும்ப தரும் தொகையை ஏற்க மறுப்பது ஏன்?’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்