ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் திகதி மற்றும் ஒப்பந்தம் உறுதியானது: 27 நாடுகள் ஒப்புதல்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற 2016இல் நடந்த கருத்து வாக்கெடுப்பில் பெரும்பான்மை பிரித்தானிய மக்கள் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா தரப்பில் சுமார் 18 மாதங்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிரித்தானியா விலகுவதற்கான இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

2019 மார்ச் 29 அன்று பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற திகதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

585 பக்கங்கள் கொண்ட வெளியேற்ற ஒப்பந்தத்த்தில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும்போது செய்யக் கடமைப்பட்டுள்ள செயல்கள் குறித்து கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது அமலானபின் பிரித்தானியா தனி வர்த்தக நடைமுறையைக் கையாளும் என்பதால், அங்கு சுங்கச் சோதனைகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதும் இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான இறுதி ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனல்டு டஸ்க் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் அமைந்துள்ள பிரஸல்ஸ் நகரில் அந்த 27 நாடுகளின் தலைவர்கள் நடத்திய ஆலோசனைகளுக்கு பிறகு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பு எதுவும் நடத்தப்படாமல், அனைத்து நாடுகளின் தலைவர்களும் ஒரு மனதாக இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

இந்த ஒப்புதலை தொடர்ந்து, இனி பிரித்தானியா நாடாளுமன்றத்திலும் பிரதமர் தெரசா மே ஒப்புதல் வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்