விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவை சாப்பிட்ட இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! வேதனையோடு கூறிய சம்பவம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவை சாப்பிட்டதால், அவருக்கு அலர்ஜி ஏற்பட்டு உயிருக்கு போராடிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் Wokingham பகுதியைச் சேர்ந்தவர் Sonia Bagga(39). இவருக்கு ராஜ்(44) என்ற கணவரும் 14 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர்.

இந்நிலையில் இவர் கடந்த செப்டம்பர் மாதம் பிரிட்டிஷ் ஏர்வேசுக்கு சொந்தமான விமானம் ஒன்றில் துபாயிலிருந்து பிரித்தானியாவிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது விமானத்தில் எள் விதைகள் கொண்டு சமைக்கப்பட்ட சிக்கன் உணவை சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட பின்னர் அவரால் சரிவர மூச்சுவிட முடியவில்லை, பேச முடியவில்லை, திணறியுள்ளார்.

இதனால் அவர் உயிருக்கு போராடியுள்ளார். அப்போது விமானத்தில் பெண் மருத்துவர் ஒருவர் அவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

இதையடுத்து விமானம் லண்டன் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு அவர் Hillingdon மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நான் அந்த நிமிடம் இறந்துவிடுவேன் என்று தான் நினைத்தேன்.

ஏனெனில் என்னால் மூச்சு விட முடியவில்லை, அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த மருத்துவர் என்னை காப்பாற்றினார் என்று தான் சொல்ல வேண்டும், விமான நிறுவனத்தின் மீது நான் புகார் கொடுக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்து விமானநிறுவனம் தெரிவிக்கையில், முதலில் எங்களுக்கு பயணிகள் பாதுகாப்பு முக்கியம், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்