முதல் உலகப்போரின் நூற்றாண்டு நினைவு நாள்: அஞ்சலி செலுத்திய அரச குடும்பம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

முதல் உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் சினோடாஃபில் உள்ள போர் நினைவுச்சின்னம் மீது மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1914ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி துவங்கி, 1918ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி வரை முதல் உலகப்போர் நடைபெற்றது.

இதில் பல நாடுகளை சேர்ந்த ஏராளமான வீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஒட்டுமொத்த உலகத்தையும் சோகத்தில் ஆழ்த்திய இந்த போரின் நினைவு நாளில், அனைத்து நாடுகளிலும் உள்ள நினைவு சின்னங்களின் முன் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவது உண்டு.

அதன் 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் யுத்தத்தில் இறந்தவர்களை கௌரவிப்பதற்காக பிரித்தானியாவில் இன்று காலை 11 மணிக்கு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ராணி சார்பில் இளவரசர் சார்லஸ், வைட்ஹாலில் உள்ள நினைவுச்சின்னத்தின் மீது மலர் வளையம் வைத்தார்.

நிகழ்ச்சியின் போது கேமில்லா, மேகன் மற்றும் கேட் 92 வயதான ராணியுடன் பால்கனியில் நின்று பார்த்து கொண்டிருந்தார்கள்.

இளவரசர் ஹாரி மற்றும் பிரின்ஸ் வில்லியம் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்தனர். இளவரசர் பிலிப் சார்பில் மலர்வளையம் வைக்கப்பட்டது. ஆனால் அவர் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

லேபர் தலைவரான ஜெர்மி கார்பினை தொடர்ந்து பிரதம மந்திரி தெரசா மே மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அமைச்சர்கள் சார்பில் பாதுகாப்பு அமைச்சர் டேவிட் கேமரூன் முதல் நபராக நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். அவரை தொடர்ந்து கோர்டன் பிரவுன், சர் ஜான் மேஜர் மற்றும் டோனி பிளேயர் ஆகியோரும் கலந்துகொண்டனர்

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்