நாள்பட்ட உணவு... கொத்தடிமையான போலந்து நாட்டவர்: பிரித்தானிய தம்பதிக்கு நேர்ந்த கதி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

போலந்து நாட்டவர் ஒருவரை நான்காண்டு காலம் மிக குறைந்த ஊதியம் அளித்து அருவருப்பான அறையில் தங்க வைத்த இந்திய வம்சாவளி பிரித்தானிய தம்பதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவில் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக பணியாற்றும் ப்ரீத்பால் சிங் மற்றும் அவரது கணவர் பல்விந்தர் சிங் ஆகியோரையே பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த நான்காண்டு காலம் குறித்த தம்பதிகளின் சவுத்தாம்ப்டன் பகுதியில் உள்ள குடியிருப்பின் தோட்டத்தில் துயர வாழ்க்கை வாழ்ந்துவந்த அந்த போலந்து நாட்டவரை அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.

ஊதியமாக உணவு மட்டுமே வழங்கப்படும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே குறித்த தம்பதிகள் அந்த போலந்து நாட்டவருக்கு வேலை வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படுக்கையோ போர்வையோ வழங்கப்படவில்லை எனவும், இரவுகளில் நாற்காலியில் இருந்தே இவர் தூங்கி வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெரும்பாலும் நாள்பட்ட உணவுகளையே இவருக்கு அந்த இந்திய தம்பதிகள் வழங்கி வந்துள்ளனர். மேலும் கழிவறையும் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் இல்லை எனவும் கூறப்படுகிறது.

ஒரு கொத்தடிமை போளவே அந்த போலந்து நாட்டவரை குறித்த பேராசிரியர் குடும்பம் நடத்துவதாக தகவல் கிடைத்ததன் பேரிலேயே தாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக Gangmasters and Labour Abuse Authority நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தொழிலாளர்களை துஸ்பிரயோகம் செய்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய நாட்டவர்கள் மீது போதிய ஆதாரங்கள் கிடைத்ததன் பின்னரே அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டதாக GLAA நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்