லண்டனில் SONY தலைமையகத்தில் பயங்கர கத்தி குத்து: ஆயுதமேந்திய பொலிசார் குவிப்பு

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் இருக்கும் சோனி தலைமையகத்தில் அடையாளம் தெரியாத நபர் அங்கிருக்கும் நபர்களை நோக்கி கத்தியால் தாக்கியதால், இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Kensington பகுதியின் Derry வீதியில் இருக்கும் பிரபல நிறுவனமான Sony தலைமையக கட்டிடத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர் சுமார் 8 அடி நீளம் கொண்ட கத்தியால் அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளார்.

இதனால் இரண்டு பேர் காயமடைந்திருப்பதாகவும், தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த பொலிசார் அந்த நபரை கைது செய்துள்ளதுடன், கட்டிடத்தில் இருந்த சுமார் 100-க்கு மேற்பட்ட சோனி ஊழியர்களை வெளியேற்றி, அந்த கட்டிடத்தை தற்போது தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இது ஒரு தீவிரவாத தாக்குதல் கிடையாது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை நேரில் கண்ட நபர் கூறுகையில், திடீரென்று ஒரு சத்தம் கேட்டது, அப்போது நான் கண்ணாடி வழியாக பார்த்த போது இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

அதில் ஒருவன் கத்தியால் தாக்கிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்தவர்கள் தங்களை காத்துக் கொள்ள கைகளை நீட்டினர். இதனால் அவர்களுக்கு கை மற்றும் கால்களில் இரத்தம் வழிந்தது.

அந்த தளம் முழுவதுமே இரத்தக் கறை இருந்தது. அனைவரும் உயிர் பயத்தில் கத்தினர். அவனை தடுக்க முன்வரவில்லை, ஏனெனில் அவன் கத்தி வைத்திருந்ததால், குத்திவிடுவானோ என்று அஞ்சினர். எதற்காக இப்படி நடக்கிறது எனக்கு ஒன்றுமே புரியாமல் தவித்தேன்.

அதன் பின் பொலிசார் விரைந்து வந்ததால், அந்த நபரை கைது செய்தனர்.

இது குறித்து ஸ்காட்லாந்து யார்டு பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொலிசாருக்கு இன்று காலை சரியாக 11 மணிக்கு இது போன்ற சம்பவம் நடப்பதாக தகவல் வந்தது.

இதையடுத்து பொலிசார், தீயணைப்பு வீரர்கள், ஆயுதமேந்திய பொலிசார் என அனைவரும் அங்கு விரைந்தோம். முதலில் அங்கிருந்தவர்களை பத்திரமாக வெளியில் மீட்டோம்.

இந்த சம்பவம் காரணமாக இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர். ஆனால் அவர்களின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான், எதற்காக அவன் இப்படி செய்தான் என்பது குறித்து தெரியவில்லை, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது உறுதியாக தீவிரவாத தாக்குதலாக இருக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்