காணாமல் போன பிரித்தானியரும் மனைவியும் சடலமாக கண்டுபிடிப்பு: தாய்லாந்தில் பரபரப்பு சம்பவம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தாய்லாந்தில் பிரித்தானியர் ஒருவரும் அவரது காதல் மனைவியும் காணாமல் போனதாக அவரது மகள் அளித்த புகாரின் பேரில் ஆறு நாட்களாக பொலிசார் அவர்களைத் தேடி வந்த நிலையில், அவர்கள் இருவரும் அவர்களது வீட்டுக்கு பின்புறமே சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடின்பர்கை சேர்ந்த வர்த்தகரான Alan Hogg (64) அவரது மனைவியான Nott (61) இருவரும் காணாமல் போன நிலையில் பொலிசார் அவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்களது காரை திருடியதாக Nottஇன் சகோதரரான Warut Satchakit (63) என்பவரை பொலிசார் கைது செய்தனர்.

இதற்கிடையில் மீட்ட காரிலிருந்த அடையாளங்களை ஆய்வு செய்த தடயவியல் நிபுணர்கள் உதவியால் கூலிக்கு கொலை செய்யும் மூவர் பொலிசாரிடம் சிக்கினர்.

அவர்கள், தாங்கள்தான் Alan Hogg, Nott இருவரையும் கொலை செய்ததாகவும், Nottஇன் சகோதரரான Warut Satchakitதான் தங்களுக்கு பணம் கொடுத்து அவர்களை கொலை செய்யத் தூண்டியதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

Alan Hoggஐ துப்பாக்கியால் சுட்டும், Nottஐ சுத்தியலால் அடித்தும் கொன்று வீட்டுக்கு பின்புறம் இரண்டு அடிக்கு குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அவர்களது வழிகாட்டுதலின் பேரில் மோப்பநாய்கள் உதவியுடன் பொலிசார், Alan Hogg, Nott இருவரின் உடல்களையும் தோண்டி எடுத்தனர்.

அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers