விஜய் மல்லையா மும்பை சிறை வருவது உறுதியா? சிறையின் வீடியோவைக் கேட்கும் லண்டன் நீதிமன்றம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

வங்கி மோசடி வழக்கில் லண்டனில் விசாரணையை எதிர்கொண்டு வரும் விஜய் மல்லையா இன்று நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி வரை அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளதோடு மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையின் வீடியோவை தனக்கு காட்ட வேண்டும் என நீதிபதி இந்திய அதிகாரிகளிடம் வற்புறுத்தியுள்ளார்.

இதனால், விஜய் மல்லையா மும்பை சிறை வருவது உறுதி என்னும் ஒரு கருத்து உருவாகியுள்ளது.

இந்திய வங்கிகளில் இருந்து சுமார் ரூ.9 ஆயிரம் கோடிக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா லண்டனில் தஞ்சமடைந்துள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக வழக்கு விசாரணை லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்திய வங்கிகள் தொடர்ந்த மற்றொரு வழக்கில் பிரிட்டன் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அவரது சொத்துக்களை முடக்க லண்டன் கோர்ட் கடந்த முறை உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் இன்று வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜரானார்.

முதன்முறையாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் இந்த விசாரணையில் பங்கேற்றனர்.

விசாரணையின் இறுதியில் நீதிபதி செப்டம்பர் 12-ம் தேதி வரை விஜய் மல்லையாவுக்கு ஜாமின் வழங்கினார். அதே தேதியில் வழக்கின் விசாரணை நடக்கும் என்றும் அன்றைய தினம் விஜய் மல்லையா ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த விஜய் மல்லையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது தன் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என்று அவர் கூறினார்.

விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் அவரது வழக்கறிஞர், மும்பை ஆர்தர் ரோடு சிறை நெரிசல் மிக்கதாகவும் சுகாதாரமற்றதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் லண்டன் நீதிமன்ற நீதிபதி சிறையின் வீடியோவைக் கேட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்